Home தாயக செய்திகள் வரலாற்றை மாற்றியமைக்கும் சதித் திட்டம் இரவோடு இரவாக அரங்கேற்றம்!

வரலாற்றை மாற்றியமைக்கும் சதித் திட்டம் இரவோடு இரவாக அரங்கேற்றம்!

111
0

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக விஜயன் சிறிலங்கா வருகை தந்து இறங்கியமை போன்று சட்டவிரோத சிலைகளை நிறுவுவதற்கு சிறிலங்கா சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் வரலாற்றை மாற்றியமைக்க முற்படும் மேற்படி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பபட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில், புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இயங்கிவரும் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள சுவரில் விஜயன் சிறிலங்காவிற்கு வருகை தருவது போலவும் அவனை குவேனி வரவேற்பது போலவும் ஓவியங்கள் வரையப்பட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் திடீரென இந்த ஓவியங்கள் வரையப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அந்த இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியோரத்தில், நிலத்தை தன்னிச்சையாக ஆக்கிரமித்து விஜயனின் சிறிலங்கா வருகையை சித்திரிக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

வேறு இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்தச் சிலைகள் சிறைச்சாலைக்கு முன்பாக மேற்படி வீதி ஓரமாக வைத்து கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலும், இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகைதரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனைத் திறந்துவைப்பதற்கு ஏற்ற வகையில் நேற்று முழுநாளும் வேலைகள் மும்முரமாக இடம்பெற்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் எந்தவித அனுமதியும் பெறப்படாமல், நிலத்தை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்பாட்டை நிறுத்துமாறு மேற்படி அதிகார சபை எழுத்து மூலமாக சிறைச்சாலை நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை வழங்கியதாகவும் அதையும் பொருட்படுத்தாமல் கட்டுமான வேலைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரியவருகின்றது.

இந்த அத்துமீறிய செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆனோல்ட் தற்போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அறிந்த துணை முதல்வர் து.ஈசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமைகளை அவதானித்தனர்.

எனினும், சிலைகள் மூடிக் கட்டியிருந்தமையால் அவற்றைப் பார்வையிட அனுமதிக்க முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.