Home தாயக செய்திகள் விடுதலைப் புலிகளின் அழிவு – சம்பந்தனின் கருத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சி கடும் கண்டனம்:

விடுதலைப் புலிகளின் அழிவு – சம்பந்தனின் கருத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சி கடும் கண்டனம்:

90
0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டமையானது நல்ல விடையம் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தாவும், அக்கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கமும் புலிகளின் அழிவு எந்தவகையில் சம்பந்தனை மகிழ்வடையச் செய்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் (19/12) யாழ்ப்பாணத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்படி இருவரும் தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது புலிகளின் அழிவு நல்ல விடையம் என தெரிவித்த கருத்தானது மிகவும் பாரதூரமானது என்பதோடு இத்தகைய நிகவில் அக் கருத்து வெளியானது வேதனையளிக்கிறது.

யாருடையதோ நோக்கத்தை நிறைவேற்றவா சம்பந்தன் இவ்வாறு பேசி வருகிறார். அல்லது சிலவேளை புலிகளின் அழிவு அவருக்கு மகிச்சியானதாக இருக்கலாம்…! ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் என்ன நடாந்தது. என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இன்றுவரை அதனுடைய தாக்கத்தை நாம் விளக்க வேண்டியதில்லை. இன்றும் மக்கள் எவ்வளவு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது கண்கூடு. சரணடைந்த போராளிகளின் எண்ணிக்கை இன்றுவரை சரியாக தெரியவில்லை. காணாமல் போன உறவுகளை தேடி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் அலைந்துகொண்டிருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் இயக்கம் அரசுடன் பேச்சு நடாத்திக் கொண்டிருந்த போது அது இலங்கையை இரண்டு நாடாக்குவதற்கான பேச்சுவார்த்தை என யாரும் சொல்லவில்லை. இலங்கைத் தீவிற்குள் தமிழினத்திற்கான நிரந்தரத் தீர்வை கண்டறிய முடியுமா என்ற எதிர்பார்ப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அது.

நீண்ட யுத்த சூழலை தாண்டி ஓர் சமாதான சூழலில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மக்களின் ஆதரவோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தை. இருப்பினும் பல்வேறு காரணங்களினால் யுத்தம் வெடித்தது.

விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதே இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட கொடிய போர் அது. இதற்கு வெளிநாடுகளின் ஆதரவும் பெறப்பட்டிருந்தமை வெளிப்படையான உண்மை. இறுதியில் புலிகளும் தோற்கடிக்கப்பட்டனர். அந்த தோல்வி தென்னிலங்கையை மகிழ்வடைய வைத்ததையும், அவர்கள் அதை கொண்டாடியதையும் நாம் அறிவோம்.

ஆனால் அது சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தமிழர்கது மனங்களிலும் அதிர்ச்சியானதாகவும், வேதனை அளிக்கும் நிகழ்வாகவும் அமைந்ததோடு விரக்தியின் உச்சத்திற்கே கொண்டுசென்றது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அன்று முதல் இன்று வரை உள்ள இரா.சம்பந்தன் 2004இல் தேரலின் போதும், 2009இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் 2010 மற்றும் 2015 இலும் புலிகளின் பெயரைச் சொல்லி சொல்லி மக்கள் முன் வாக்கு கோரியதை மறந்து “புலிகளின் அழிவு நல்ல விடையம்” என அவர் கூறியிருப்பது அவரது ஆழ் மனதில் உள்ளதன் வெளிப்பாடாகவே பார்ர்க்கக்கூடியதாக உள்ளதாகவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.