Home முக்கிய செய்திகள் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு இல்லை – அபிவிருத்தி மட்டுமே: கோட்டாபய

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு இல்லை – அபிவிருத்தி மட்டுமே: கோட்டாபய

80
0

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு, அதிகாரப் பகிர்வை வழங்க முடியாது என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்கள் நிராகரிக்கின்ற ஒன்றை எவ்வாறு வழங்க முடியும் என்று ஜனாதிபதி அவர் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அதிகாரப்பகிர்வும் அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயமாகும். அதனை செய்யமுடியாது. பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒன்றை எவ்வாறு எம்மால் செய்யமுடியும்?

70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முனனெடுக்கப்படவில்லை.

இலங்கையில், வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.

அதிகார பகிர்வு என்ற விடயமானது, ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே தவிர, அதனை முன்வைத்து மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு சுகபோக நன்மைகளை அனுபவித்ததோடு இறுதியில் மக்களையும் ஏமாற்றிவிட்டனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என அரசியல்வாதிகள் கூறினாலும், அவர்களால் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை நாங்கள் தான் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பின் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதே என் நம்பிக்கை. பாதுகாப்பு நாட்டில் உறுதி செய்யாவிடத்து நல்லிணக்கமும் ஏற்படாது. எனவே நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த சிறந்த வேலைத்திட்டம் என்னிடத்தில் உள்ளது.

அதன் முதற்படியாக பாதுகாப்பை உறுதிசெய்ய அதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை பாதுகாப்பு செயலாளராக நியமித்திருக்கின்றேன். புலனாய்வுப் பிரிவிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். முப்படையினரும் எனது கொள்கையை அறிவார்கள் என நம்புகிறேன்.இவர்களிடம் எனது வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளை எதிர்பார்த்த போதிலும் பெருமளவில் கிடைக்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சுயாதீனமாக முடிவெடுக்கும் நிலையில் இருந்திருந்தால் அவர்கள் சரியான தெரிவை செய்திருப்பார்கள். எனினும் அவர்கள் மீது வெளிக்கள அழுத்தம் இருந்தது.

எனினும் நான் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்குமே ஜனாதிபதி என்பதை பதவியேற்பு நாளில் தெரிவித்திருக்கின்றேன்.

அதற்கமைய தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவை அவர்களுக்காக நியமித்துள்ளேன். அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அவரது நியமனத்தின் ஊடாக தமிழ் மக்களுடன் எனது அரசாங்கம் நெருக்கமாக செயற்படும் என்பதை தெரியப்படுத்தியுள்ளேன் என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள் என நினைக்கின்றேன்” என கூறியுள்ளார்.