Home செய்திகள் ஜெனீவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள இலங்கை அரசு:

ஜெனீவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள இலங்கை அரசு:

199
0
U.N. High Commissioner for Human Rights Michelle Bachelet attends a session of the Human Rights Council at the United Nations in Geneva, Switzerland, March 6, 2019. Picture taken with a fisheye lens. REUTERS/Denis Balibouse

நாட்டில் ஆட்­சி­மாற்றம் இடம்­பெற்­றுள்ள புதிய சூழலில் சர்­வ­தேச சமூகம் மற்றும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைப் பேரவை விட­யங்­களும் மீண்டும் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. ஜெனிவா மனித உரிமை பேர­வையில் அடுத்து என்ன நடக்­கப்­போ­கி­றது? இலங்கை தொடர்­பாக ஜெனி­வாவில்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்ற பிரே­ர­ணையின் அடுத்த நிலை என்ன? பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு   நீதி கிடைக்­குமா? ஏற்­க­னவே  ஆரம்­பிக்­கப்­பட்ட மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொட­ருமா?  உள்­ளிட்ட பல்­வேறு கேள்­விகள் தற்­போது மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருக்­கின்­றன. 

தற்­போ­தைய சூழலில் அனை­வ­ரது கவ­னமும் ஜெனிவா மனித உரிமை பேரவைப் பக்­கமே திரும்­பி­யி­ருக்­கி­றது. காரணம் எதிர்வரும் மார்ச் மாதம்    ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள  43ஆவது  கூட்டத் தொடரில்      ஜெனிவா பிரே­ரணை தொடர்­பாக  இடம்­பெ­றப்­போகும்  நட­வ­டிக்கை என்ன?  என்­பது குறித்து  சம்­பந்­தப்­பட்ட  தரப்­பினர் ஆராய்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். 

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்கை தொடர்­பாக கடந்த 2015ஆம் ஆண்டு அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான 30/1 என்ற பிரே­ர­ணையை மாற்­றி­ய­மைக்­க­ வே­ண்டும் அல்­லது திருத்­தி­ய­மைக்­க­ வேண்டும் என்­பதில்   அர­சாங்கத் தரப்­பினர் மிகவும் தெளி­வாக இருக்­கின்­ற­மையை உண­ர­மு­டி­கின்­றது.  காரணம்  அந்தப் பிரே­ர­ணையை  அவ்­வாறே தொடர முடி­யாது என்றும் அது தொடர்­பாக  மாற்று நட­வ­டிக்­கையை எடுக்­க­வேண்டும் என்­ப­துமே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக இருக்­கி­றது.  இது தொடர்பில்     சில தினங்­க­ளுக்கு முன்னர்  கேச­ரி­யுடன்  தகவல் பகிர்ந்­து­கொண்ட   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை மீளாய்வு செய்யும் பணிகள்   ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன.   அது தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு எமது தீர்­மானம்  ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு அனுப்­பி­வைக்­கப்­படும்.  நாம்  சரி­யான மீளாய்வை செய்து உரிய முடிவை எடுத்து அதனை அறி­விப்போம் என்று   தெரி­வித்­தி­ருந்தார். 


ஜெனி­வாவின் அவ­தானம் 
இதன்­படி பார்க்­கும்­போது ஜெனிவா பிரே­ர­ணையை  அர­சாங்கம்   அவ்­வாறே  ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் அதனை   மீளாய்வு செய்து  மாற்று  ஏற்­பாட்டை  முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது என்­பதும் தெளி­வா­கின்­றது.   எனவே அர­சாங்­கத்தின்   நிலைப்­பாடு தெளி­வாக இருக்­கின்­றது.   

இந்­நி­லையில் அடுத்த கட்­ட­மாக   தமிழர் தரப்பு பிர­தி­நி­திகள் இது தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்­பி­லேயே தற்­போது கேள்­விகள் எழு­கின்­றன. மிக முக்­கி­ய­மாக  இதன் பின்­ன­ணியை சற்று  ஆராய்ந்து பார்த்தால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­த­தி­லி­ருந்தே ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேரவை இலங்கை தொடர்பில்   அவ­தா­னத்­துடன் இருந்து வந்­தது.  எனினும்  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் முதல் தட­வை­யாக  2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்­கையே   கொண்­டு­வந்­தது.  அப்­போ­தைய மனித உரி­மைகள்  அமைச்­ச­ராக இருந்த மஹிந்த சம­ர­சிங்க தலை­மையில் இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­துடன் அது நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் உள்­ளக ரீதியில்   குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஆரா­யப்­பட்டு விசா­ரிக்­கப்­படும் என   தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 


நல்­லி­ணக்க  ஆணைக்­குழு 
எனினும் 2012ஆம் ஆண்டு வரை  எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் உரிய முறையில் இடம்­பெ­ற­வில்லை. 2010ஆம்  ஆண்டு  கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது.  அந்த ஆணைக்­குழு இலங்கை முழு­வதும்  விஜயம் செய்து மக்­க­ளிடம் சாட்­சி­யங்­களை பெற்று  2010ஆம் ஆண்டு இறு­தியில் தனது அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில் பல முக்­கிய  பரிந்­து­ரை­களும் இடம்­பெற்­றன.  எனினும்  அந்தப் பரிந்­து­ரைகள்  அக்­கா­லத்தில் முழு­மை­யாக   அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக 2012, 2013, 2014ஆம் ஆண்­டு­களில்  இலங்கை தொடர்­பாக   சர்­வ­தேச சமூ­கத்­தினால் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்டு  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டன. எனினும் அவற்றை அப்­போ­தைய அர­சாங்கம் முற்­றாக நிரா­க­ரித்­தது.  

 
30–1 பிரே­ரணை 
இந்தப் பின்­ன­ணி­யி­லேயே 2015ஆம் ஆண்டு அதி­கா­ரத்­துக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் மீண்டும் ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.  அதில்  20 பரிந்­து­ரைகள் அடங்­கி­யி­ருந்­தன. பொறுப்­புக்­கூறல், உண்­மையைக் கண்­ட­றிதல்,  நீதியை நிலை­நாட்­டுதல் உள்­ளிட்ட பல விட­யங்கள் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்தப் பிரே­ர­ணைக்கு  அப்­போது யாரும் எதிர்­பா­ராத வித­மாக இலங்கை இணை  அனு­ச­ரணை வழங்­கி­யது. 

2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை  இந்தப் பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென  ஏற்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டது.  எனினும் அது அவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மையின் கார­ண­மாக   2017ஆம் ஆண்டு குறித்த 30/1 என்ற பிரே­ர­ணை­யா­னது மீண்டும் 34/1 என்ற  பெயரில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு  நீடிக்­கப்­பட்­டது. ஆனாலும்  2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறித்த நீடிக்­கப்­பட்ட பிரே­ரணை  முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததால் மீண்டும் 2021ஆம்   ஆண்டு வரை  40/1 என்ற பெயரில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 


ஐ.நா. ஆணை­யாளின் இலங்கை குறித்த அறிக்கை 
இந்த நிலை­யி­லேயே    2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் 43ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ள­துடன்   அதில் இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை  எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது தொடர்­பாக   ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்  ஒரு இடைக்­கால அறிக்­கை­யையும் வெளி­யிட இருக்­கிறார்.  இந்த   நிலை­யி­லேயே   இலங்கையில் தற்­போது  ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­துடன் புதிய அர­சாங்­க­மா­னது  குறித்த  ஜெனிவா பிரே­ர­ணையை மீளாய்வு செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.  

காரணம்  தற்­போ­தைய  அர­சாங்கம் எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போதே இந்த ஜெனிவா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப்­போது அதில்  உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த   வெளி­நாட்டு நீதி­ப­திகள்  என்ற விட­யத்தை  அப்­போ­தைய எதிர்க்­கட்சி கடு­மை­யாக விமர்­சித்­த­துடன்  அதனை எதிர்ப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே  அப்­போ­தைய எதிர்க்­கட்­சி­யாக இருந்த மஹிந்த தரப்­பினர் ஆட்­சிக்கு வந்­துள்ள நிலையில்   இந்தப் பிரேர­ணையை   மீளாய்வு செய்­வ­தாக அறி­வித்­தி­ருந்­தனர். எனவே  அடுத்த கட்­ட­மாக   புதிய அர­சாங்கம் எவ்­வாறு  இந்தப் பிரே­ர­ணையை   அணு­கப்­போ­கின்­றது என்­பது பிர­தான கேள்­வி­யாகும். 


அரசின் மாற்று திட்டம் 
அதா­வது  எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 43ஆவது கூட்டத் தொடர்  அல்­லது  செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள   44ஆவது கூட்டத் தொடரில் இலங்கை    அர­சாங்கம்   ஜெனிவா  பிரே­ரணை தொடர்­பான தனது மாற்று யோச­னையை  முன்­வைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதில்  குறிப்­பாக சில திருத்­தங்­களை  அர­சாங்கம் கோரும் என ஊகிக்­கப்­ப­டு­கின்­றது.  முழு­மை­யாக இந்த பிரே­ர­ணையை விட்டு வில­காமல்  அதனை மீளாய்வு செய்து அதில் திருத்­தங்­களை செய்­வ­தற்கு   அர­சாங்கம்  மாற்று யோசனை முன்­வைக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

  எவ்­வா­றான திருத்­தங்கள் முன்­வைக்­கப்­படும்?  
அவ்­வா­றெனில் எவ்­வா­றான  திருத்­தங்­களை அர­சாங்கம் செய்­யப்­போ­கின்­றது என்­பது   அடுத்த கேள்­வி­யாக எழு­கி­றது.  இது தொடர்பில் தேசிய சமா­தான செய­ல­கத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர்  கலா­நிதி ஜெகான்  பெரேரா   கேச­ரி­யுடன் தகவல் பகிர்­கையில்; 

அர­சாங்கம் தன்­னிச்­சை­யாக ஜெனிவா பிரே­ர­ணையில் இருந்து வில­கி­விடும் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை.  மாறாக  அதில்  உள்ள ஒரு சில   விட­யங்­களை நீக்­கு­மாறு அர­சாங்­கத்­த­ரப்­பி­லி­ருந்து கோரிக்கை விடுக்­கப்­ப­டலாம். அதா­வது  திருத்­தங்­களை  செய்­யு­மாறு  அர­சாங்கம் கோரும். ஆனால் அதி­லி­ருந்து  முழு­மை­யாக வில­காது என்றே  நான் நம்­பு­கின்றேன். மிக முக்­கி­ய­மாக அந்த பிரே­ர­ணையில் உள்ள   வெளி­நாட்டு நீதி­ப­திகள் என்ற விட­யத்தை நீக்­கு­மாறு அர­சாங்கம்   கோரிக்கை விடும் சாத்­தியம் உள்­ளது.  அத்­துடன்  அதி­லுள்ள ஏனைய விட­யங்­களை  ஏற்­றுக்­கொள்ளும் சாத்­தியம் இருக்­கி­றது.  காரணம்  இந்த அர­சாங்­கத்தில் நாம்  சில மாற்­றங்­களை காண்­கின்றோம்.  அவை ஆரோக்­கி­ய­மான மாற்­றங்­க­ளாக தெரி­கின்­றன.  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் 2015க்கு முன்­னரை விட   நல்ல மாற்­றங்கள் தெரி­கின்­றன.  அவர்   வரை­ய­றுக்­கப்­பட்ட சுதந்­திரம் தொடர்பில் சிந்­திப்­ப­தாக தெரி­கின்­றது. எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் அந்த வரை­ய­றுக்­கப்­பட்ட  சுதந்­தி­ரத்­திலும் அதிக இடம் இருப்­ப­தா­கவே கரு­து­கின்றோம். எனவே நாம் அந்த நல்ல விட­யங்­களை பாராட்ட வேண்டும். மிக முக்­கி­ய­மாக ஜனா­தி­பதி   நாட்டின் ஒழுக்கம் குறித்து பேசி­வ­ரு­கின்றார்.  எனவே   ஆரோக்­கி­ய­மான மாற்றம் நாட்டில்  ஏற்­படும் என்று நாங்­களும்  நம்­பு­கின்றோம். அர­ச­சார்­பற்ற   நிறு­வ­னங்­க­ளான எம்­மீது இது­வரை எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­க­ளையும் விதிக்­க­வில்லை. அத­னையே ஒரு சிறந்த மாற்­ற­மாக நாம்  பார்க்­கிறோம் என்று சுட்­டிக்­காட்­டினார். 

கலா­நிதி ஜெகான் பெரேரா கடந்த அர­சாங்க காலத்தில்  அர­சாங்க தூதுக்­கு­ழுவில்  ஜெனிவா  மனித உரிமைப் பேரவை அமர்­வு­களில் பங்­கேற்று உரை­யாற்­றி­யி­ருந்­தவர்.  அந்­த­வ­கையில்  தற்­போது அவரின் மதிப்­பீட்டின் பிர­காரம்    அர­சாங்கம்   ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து முழு­மை­யாக வில­கி­வி­டாது என்­பதை வெளி­யி­டு­கிறார்.  


என்ன திருத்­தங்கள்?
பொது­வாக அவ்­வாறு ஒரு தோற்­றப்­பாடு  இருந்­த­போ­திலும் அர­சாங்கம் எவ்­வா­றான திருத்­தங்­களை செய்­யப்­போ­கின்­றது என்­பது   இங்கு மிக முக்­கி­ய­மாகும்.   அதா­வது   அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­காது என்­பது  பொது­வான  பார்­வை­யாக இருந்­த­போ­திலும் எவ்­வா­றான திருத்­தங்கள் வரப்­போ­கின்­றன என்­பது தொடர்பில் மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­கின்­றனர். இது தொடர்பில் இந்தப் பிரே­ர­ணையை  முன்­னின்று உரு­வாக்­கிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  எம்.ஏ. சுமந்­திரன்  கருத்து வெளி­யி­டு­கையில்;

இந்த ஜெனிவா பிரே­ர­ணை­யி­லி­ருந்து அர­சாங்கம் வில­கு­வ­தற்கு நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம்.   அர­சாங்­கத்­தினால் வில­கவும் முடி­யாது.  அர­சாங்கம்  என்ன செய்­யப்­போ­கின்­றது என்­ப­தையே நாங்கள் பார்க்­கின்றோம். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே எமது அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் அமையும். எனவே அர­சாங்கம்  மீளாய்வு செய்து  என்ன திட்­டத்தை  முன்­வைக்­கப்­போ­கின்­றது என்­பதை

 பார்த்­து­விட்டு நாம் எமது அடுத்த கட்­டத்தை ஆரம்­பிப்போம்.  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் விட­யத்தில் நாம்  தொடர்ந்தும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம் என்றும்  குறிப்­பிட்டார். 

பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் சார்பில்  செயற்­ப­டு­வ­தற்­காக மக்கள் ஆணையைக்  கொண்­டுள்ள  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் அடுத்து  ஜெனிவா விட­யத்தில்  எவ்­வா­றான விட­யங்­களை   எடுக்­கப்­போ­கின்­றனர் என்­பதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.  எனவே அடுத்த கட்­ட­மாக  என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது துல்­லி­ய­மான தெளிவைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்­கின்ற போதிலும்  திருத்­தங்கள் அல்­லது மாற்­றங்கள் வரப்­போ­கின்­றது என்­ப­தனை  ஊகிக்க முடி­கின்­றது. 

 
அங்­க­லாய்ப்பு  
இந்த சூழலில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அந்த செயற்­பாட்­டுக்கு என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதே முக்­கிய கேள்­வி­யாக உள்­ளது.    தமது  உற­வு­களை தொலைத்­து­விட்டு  அவர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு  போரா­டு­கின்ற மக்கள் மற்றும்  அர­சியல் கைதி­களை விடு­விக்­கு­மாறு கோரு­கின்ற மக்கள் என பல வழி­களில்  பாதிக்­கப்­பட்ட மக்கள் இருக்­கின்­றனர்.  ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே   காணா­மல்­போனோர் அலு­வ­ல­கமும்   இழப்­பீடு வழங்கும் அலு­வ­ல­கமும்  நிறு­வப்­பட்­டுள்­ளன. எனவே அர­சாங்கம்  ஜெனிவா பிரே­ர­ணையை மீளாய்வு செய்­யு­மாயின் அல்­லது அதற்­காக மாற்று ஏற்­பாட்டை முன்­வைக்­கு­மாயின் இந்த  காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் மற்றும்    இழப்­பீடு வழங்கும்  அலு­வ­லகத்தின் எதிர்காலம்   என்ன என்பது குறித்தும்    கேள்வி எழுப்பப்படுகின்றது. 

இந்த நிறுவனங்கள் ஊடாக இதுவரை   எந்தவிதமான நீதியும் நிலைநாட்டப்படவில்லை. அத்துடன்   எந்தப்பிரச்சினைக்கும்  தீர்வு எட்டப்படவும் இல்லை.   எனினும்  தற்போது  ஜெனிவா பிரேரணை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு   அரசாங்கம்  முன்வைக்கப்போகின்ற மாற்று திட்டத்தின் ஊடாகவே பதில் கிடைக்கப்போகின்றது. இந்த திட்டத்தின் ஊடாகவே எதனை  திருத்துமாறு கோரும் என்பதை அரசாங்கத்தின் மீளாய்வு அறிக்கையின் ஊடாகவே நாம் அறிந்துகொள்ள முடியும். 

முழுமையாக அரசாங்கம்  பிரேரணையிலிருந்து விலகுமா  அல்லது திருத்தங்களை கோருமா  என்பதும்   இன்னும் தெளிவாக  தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் இதில் அரசாங்கம் மாற்றுத்திட்டத்தை முன்வைத்து திருத்தத்தை கோரும் என்பது  தெளிவாக தெரிகிறது.  ஆனால்  இன்னும் அதற்கு சற்று காலம் இருப்பதாகவே தெரிகின்றது. பெரும்பாலும்  அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பின்னரே  அரசாங்கம் இது     வலுவான   நகர்வை முன்னெடுக்கும் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது. 

எப்படியிருப்பினும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது அனைவரதும்  கடமையாகும். அந்த மக்களின் வலியைப் புரிந்து அவர்களுக்கு ஒரு நிரந்தர விடிவைப் பெற்றுக்கொடுக்க   அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.