
இலங்கையில் இரு தேசம் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடுமையான தமது அதிருப்தியை வெளியிடுவதுடன் இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் இது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான சாதியமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க எனினும் அவர்களின் அரசியல் நகர்வுகளை நாம் கையில் எடுத்து பிரசாரம் கொடுக்கக்கூடாது என்ற காரணத்தினால் இராஜதந்திர ரீதியிலான நகர்வுகளில் இதனை முடித்துக்கொண்டோம் என தெரிவித்தார்.
இதே போல், பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள “இலங்கையில் இரு தேசங்கள் எனும் தீர்வை” ஐக்கிய தேசிய கட்சியும் கண்டித்துள்ளது.
கொழும்பில் – இன்று வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸநாயக்க நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்ததுடன் பழமைவாத கட்சி இந்த விடயத்தை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுளார்.
அதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பு அல்ல என சுவிஸர்லாந்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினையும் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.