Home முக்கிய செய்திகள் இலங்கையில் அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள்! 48,000 பேர் பாதிப்பு!!

இலங்கையில் அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள்! 48,000 பேர் பாதிப்பு!!

256
0

இலங்கையில் இதுவரை 48 ஆயிரம் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர் எனவும், தொடர்ந்தும் தினமொன்றிற்கு நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பதுளை “ கெப்டல் சிட்டி” விடுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் “ பீஸ்” அமைப்பு மேற்கொண்ட செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இச் செயலமர்வு பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களை மட்டுப்படுத்திய வகையில் இடம்பெற்றது. இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் ஹசெய்ன் தொடர்ந்து பேசுகையில்,

“ எமது நாட்டில் 48 ஆயிரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்குட்பட்டிரந்த போதிலும், அவர்களில் பெரும்பாலானோர், பெருந்தோட்டத்துறைசார் சிறார்களும் உள்ளடங்கியுள்ளனர். இத் துஷ்பிரயோகங்கள் எனும்போது சிறார்களை உடல், உள, ரீதியில் பாதிக்கப்படவைப்பதும் திட்டுதல், அடிப்பது, தண்டனை வழங்குவது, உணவு வழங்காமல் இருப்பது, வேலை செய்ய நிர்பந்திப்பது போன்றவைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களைச் சார்ந்ததாகவுள்ளன.

யுத்த காலத்தில், சிறுவர்களை போராளிகளாக்குவதும், சிறுவர் துஷ்பிரயோகத்திற்குட்பட்டதாகும். இத்துஷ்ப்பிரயோகங்கள், அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள், அயலவர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், மதஸ்த்தாபனத்தினர், வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் ஆகியோரிடமிருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடத்தல், வறுமை மற்றும் பலாத்காரம், கட்டாயப்படுத்தல் போன்ற நிலையிலும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறகின்றன. சுயவிருப்பின் பேரிலும் இத்துஷ்ப்பிரயோகங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே பெற்றோர் இதுவிடயத்தில் தமது பிள்ளைகள் மீது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் கண்காணிக்கப்படல் வேண்டும். தமது பிள்ளைகள் தப்பாக நடக்க முற்படுவதை பெற்றோர் தடுத்தாக வேண்டும்.

சிறுவர் துஷ்;பிரயோகங்கள் இடம்பெறுவதை அறியும் நபர்கள் அது குறித்து “1929” என்ற இலக்கத்தையுடைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அருகேயுள்ள பொலிஸ் நிலையம் அத்துடன் 165/2 இலக்கத்தின் துட்டுகெமுனு வீதியில் கொகுவல என்ற இடத்தில் அமைந்திருக்கும் “ பீஸ்” நிறுவனத்திற்கும் அறியத் தரல் வேண்டும்” என்றார்.

சட்டத்தரணி அப்சரா கஸ்தூரியாராய்ச்சி தமதுரையில்” 18 வயதுகளுக்கு குறைவான அனைவருமே சிறார்களாகவே கணிக்கப்படுகின்றனார். ஆகவே இவர்கள் விடயத்தில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அதிமுக்கியமாகும்.

இவர்கள் வாழும் சூழல் மற்றும் சுற்றாடல் ஆகியவற்றுக்கமையவே அவர்களின் எதிர்காலம் அமைகின்றது. தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே அக்குழந்தை சூழல் குறித்து உணரந்து விடுகின்றது. ஆகையினால் பெற்றோரின் பொறுப்பென்பது மகத்துவமானதாக இருக்க வேண்டும்.

தனது பிள்ளை பாடசாலைக்கு சென்று திரும்பியதும் அப்பிள்ளையின் புத்தகப்பையை சோதனையிடல் வேண்டும். அப்பைக்குள் ஏதாவதொரு பொருள் இருக்கும் பட்சத்தில் அதனை ஆராய வேண்டும். அது பற்றி பிள்ளையிடம் வினாவும்போது தனக்கு பரிசு கிடைத்ததென்று கூறலாம். அப்பரிசை யார் கொடுத்தது? ஏன் கொடுத்தார் என்றும் ஆராய வேண்டும். இரவு வேளைகளில் கையடக்கத்தொலைபேசி மற்றும் மடிக்கணணிகளை கையாளும்போதும் பெற்றோர் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

தப்பானதவறான விடயங்களில் தமது பிள்ளைகள் ஈடுபடுகின்றரென்பதை பெற்றோர் அறிந்தால் தமது பிள்ளைகளை அரவணைத்து அதன் கெடுதல்களை தெளிவுபடுத்தி அதனை கைவிடவைக்கவேண்டும்.

மாணவ பராயத்தில் அவர்களுடன் இணையத்தளம் மற்றும் முகநூல் ஆகியவற்றின் ஊடாக அறியாதவர்கள் நண்பர்களாகக்கூடும். அவர்கள் ஊடாக மாணவ, மாணவிகள் தப்பான, தவறான செயல்பாடுகளில் இறங்க வாய்ப்பாக அமையும். அறியாத இவர்களின் ஆசைவார்த்தைகளுக்கு இம் மாணவ சமூகம் அடிமையாகக்கூடும்.

அறியாதவர்கள் எவருடனும் நட்பை தொடர்வதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும். 18 வயதுகளுக்கு கீழ்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதினால் இவர்கள் ஈடுபடுத்த முடியும். தமது பிள்ளைகளை கண்டிப்பதும் தண்டிப்பதும் ஆகியவற்றைத்தவிர்த்து அன்பாகவும், ஆதரவாகவும் அரவணைத்து தவறை புரியவைத்து, நல்வழிப்படுத்த வேண்டும்.

நண்பர்கள், குடும்ப உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியப்பயிற்சியாளர், மேலதிக வகுப்பு ஆசிரியர் ஆகியோரினால் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்குற்படுத்தப்;படலாம். ஆகையினால்? பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையாகப் பேண வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில் பாதுகாவலர் மத்தியில் சிறார்கள் இருக்கும்போது, பாதுகாவலர்களினால் சிறார்கள் உடல், உள வார்த்தைகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு, வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நீதிமன்றம் அப்பாதுகாவலர்களுக்கு ஏழு வருட கடுழியச் சிறைத்தண்டனை வழங்க சட்டம் உண்டு.

மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இவ்வகையில் நடந்தாலும் அவர்களுக்கும் அதே தண்டனையே வழங்கப்படும். ஆகவே, பெற்றோர் தமது பிள்ளைகளை மிகுந்த கவனமாகவும். எச்சரிக்கையாகவும் பாதுகாக்க வேண்டும்.” என்றார்.