
ஊடகவியலாளர் துஷாரா விதானகே சி.ஐ.டி. விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான அவரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வொய்ஸ் ரியூப் எனப்படும் யூ ரியூப் அலைவரிசையின், செம்மைப்படுத்துனரான துஷாரா த லீடர் வலைத்தளத்தில் பதிவிட்ட விடயம் ஒன்றினை மையப்படுத்தி அவருக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகின்றது.
கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்ட ‘என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா’, ‘கம்பெரலிய’ ஆகிய திட்டங்களின் பிரசார பொறுப்பாளராக துஷாரா விதானகே செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.