
ஒரு சிறுவன் உட்பட 39 இறந்த மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி ஒன்றை பிரித்தானியக் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
அவசர சிகிச்சை வாகனம் ஒன்று வழங்கிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதி காவல்துறையினர் பார ஊர்தியை சோதனையிட்ட போதே 39 மனித உடல்கள் உள்ளிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாகவே கொலைக் குற்றச்சாட்டில் குறித்த வாகன சாரதியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததோடு, குறித்த பார ஊர்தியை பாதுகாப்பான ஒதுக்குப்புற இடம் ஒன்றிற்கு கொண்டு சென்று மேற்படி விசாரணைகள், மற்றும் ஆய்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
குறித்த பார ஊர்த்தி பெல்ஜியம் நாட்டினூடாக பிரித்தானியாவிற்குள் பேர்பிளீட் எனும் இடத்தை வந்தடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக எசெக்ஸ் பகுதி காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் பதட்டத்தையும், பரபரப்பையும் இச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.