Home உலக செய்திகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஊடகத்துறையில் சேவையாற்றிய திரு.ஞா.குகநாதன் அவர்கட்கு வாழ் நாள் சாதனையாளர் விருது...

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஊடகத்துறையில் சேவையாற்றிய திரு.ஞா.குகநாதன் அவர்கட்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிப்பு!

166
0

தமிழ் ஊடகத்துறையின் இதழியலில் (பத்திரிகை) 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல சாவால்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரான திரு. ஞானசுந்தரம் குகநாதன் அவர்களுக்கு சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கெளரவித்துள்ளது.

நேற்று முந்தினம் (19/10/2019) சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரீஸில் நடைபெற்ற “ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள்” நிகழ்வின் போதே இவ் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற மதிப்பிற்குரிய திரு. ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் தனது 12 வயதிலேயே தந்தைக்கு உதவியாக ஊடகத்துறைக்குள் உள் நுழைந்து 2011 ஆம் ஆண்டுவரை ஊடகத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்.

வீரகேசரி, ஈழமுரசு, உதயன் என பல பத்திரிகைகளில் பணியாற்றினாலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த உதயன் பத்திரிகையிலேயே இவரின் ஊடகப்பணி பல தசாப்தங்களாக தொடர்ந்திருந்தது.

இந்திய இராணுவ காலப்பகுதியிலும், இலங்கை இராணூவ காலப்பகுதியிலும் பல முறை தாக்குதலுக்குள்ளான இவர் ஊடகத்தின் மேல் கொண்ட காதலால் அச்சுறுத்தல்களை தாண்டியும் துணிவோடு தனது ஊடகப்பணியை செய்துவந்த ஓர் சிறந்த ஊடகப் போராளியும் ஆவார்.

ஒரு தடவை இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கோமா நிலை வரை சென்று திரும்பிய இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆணுவரை யான காலப்பகுதியின் பெரும் பகுதியை உதயன் பணிமனையிலேயே தங்கி நின்று தனது ஊடகப் பணியை ஆற்றிவந்தவர்.

இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் மீண்டும் இவர் மீது இரும்பு ஆயுதங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதலின் பின்னர் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து தற்போது ஐரோப்பிய நாடு ஒன்றில் வசித்து வருகிறார்.

ஆற்றலும், அனுபவமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டு தனது எழுத்தியலின் வலிமை உணர்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காய் அர்ப்பணிப்போடு ஊடகப் போராளியாகவே செயற்பட்ட மூத்த ஊடகவியலாளரான மதிப்பிற்குரிய திரு. ஞானசுந்தரம் குகநாதன் அவர்களை கெளரவிப்பதில் நாம் மன நிறைவு கொள்வதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களும், விருதை வழங்கியவர்களுமான “சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்” தெரிவித்துள்ளது.

இந் நிகவில் சுமார் 25 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்ததோடு படுகொலை செய்யப்பட்ட ஈழ் தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி தீபமேற்றி தமது அஞ்சலிகளஇயும் செலுத்திக்கொண்டனர்.