
ஈழத்தின் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் என அழைக்கப்படும் திரு. முத்துகுமாரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் 20/10/2019ம் நாள் பிரான்சில் நடைபெற்ற இராகசங்கமம்-11 நிகழ்வில் “ஈழத்தமிழ் விழி” விருது வழங்கி மதிப்பளிக்கப் பட்டுள்ளார்.
தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் அரும்பணியாற்றிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வருடாந்தம் “ஈழத்தமிழ் விழி” விருது பிரான்ஸ் நாட்டில் வைத்து வழங்கப்பட்டு வருகின்றது.
“ஏறுது பார் கொடி ஏறுது பார்” மற்றும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” உட்பட, இன்னும் பல நெஞ்சை விட்டு அகலாத, உயிர்வரை ஊடுருவிய பாடல்களைப் படைத்த இசையமைப்பாளர் கண்ணன் அவர்களுக்கு ஏற்கனவே இசைவாணர், கலாபூசணம், கலையரசு, இசைவேந்தன், மெல்லிசை மன்னன், சுபஸ்வரஞான பூசணம், இசைத்தமிழன், தாயக இசைஞானி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான செவரன்(Sevran) என்ற இடத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் இசைத்திறன் நிகழ்வும், இசைவாணர் கண்ணன், இசையமைப்பாளர்களான சாய்தர்சன், இசைப்பிரியன் மற்றும் தேசியப் பாடகர் வர்ணராமேஸ்வரன் ஆகியோர் இணைந்து வழங்கிய “சிறப்பு இசையரங்கம்” நிகழ்வும் நடைபெற்றிருந்தது.
புகழ்பெற்ற தாயக-புலம்பெயர் கலைஞர்களும், இசை அபிமானிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், கலைஞர்களை ஊக்குவிக்கும் பணிகளைத் திறம்படச் செய்து வரும் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு தமது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.(நிருபர்-றஞ்சித்)