Home முக்கிய செய்திகள் கோட்டபாய தொடர்பான தீர்ப்பு இன்று நண்பகலின் பின் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

கோட்டபாய தொடர்பான தீர்ப்பு இன்று நண்பகலின் பின் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

255
0

கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்றும் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301 ஆவது அறையில் இந்த மனு மூன்றாம் நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விசாரணையினைத் தொடர்ந்து இன்று நண்பகல் அல்லது மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் நேற்று ….

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலாய, நீதியரசர்கள்  அர்ஜுன் ஒபேசேகர, மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய  குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, கோத்தாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொண்டமை தொடர்பில், எந்தவொரு ஆவணமும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இல்லாதமை குறித்து, முடியுமான வரை அவசரமாக, சத்தியக் கடதாசி ஊடாக நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு,  குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரி யார் என்பது உள்ளிட்ட விடயங்களையும் அந்த சத்தியக் கடதாசியில் உள்ளடக்குமாறும் , அந்த சத்தியக் கடதாசி எந்தவொரு விசாரணைக்கும் சமர்ப்பிக்க முடியுமான வகையில் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் , மேன் முறையீட்டு நீதிமன்றம்  ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்து,  3 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள உள்நாட்டு விவகார  அமைச்சர் வஜிர அபேவர்த்தன சார்பில் மன்றுக்கு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிபர் சட்டவாளர்,  சானக டி சில்வா, ஊடாக இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதிபருக்கு  அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உள்ளதாக  வாதிடுவது தவறானது என அவர் வாதத்தை முன்வைத்தார்.

‘ அதிகாரத்தின் மூலமானது அதிபர் அல்ல. அதிகாரத்தின் மூலமானது அரசியலமைப்பே ஆகும். அரசாங்கத்தின் பிரதானியாக செயற்படும் அதிபருக்கு, அவ்வாறு செயற்பட அரசாங்கமொன்று இருத்தல் வேண்டும்.

அரசாங்கத்தின் நோக்கு நிலை மற்றும் கடப்பாடு என்பன அமைச்சரவையிலேயே தங்கியுள்ளன. மாற்றமாக  அது தனி நபரான அதிபரின் கைகளில் இல்லை. ‘என அவர் கூறினார்.

இதன்போது அவரிடம்,  மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட,  புதிய அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அமைச்சரவைக்குப் பொறுப்புக்கள் சாட்டப்படும் வரை,   அமைச்சரவை  அதிகாரங்கள்  யாருக்கும் இல்லையா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அதிபர் சட்டவாளர் சானக டி சில்வா,  அமைச்சர் ஒருவர் இல்லாத என்பது திணைக்களம் ஒன்றின் பிரதானியின் கடமைகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால், நாட்டின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை  என்றார்.

அத்துடன் அதிபருக்கு நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பு ஊடாகவே கிடைத்துள்ளதாகவும்,  அவர் அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின் பிரதானியாக இருந்த போதிலும் அரசின் நிர்வாக அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்குமே உள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டவாளர் சானக டி சில்வா, அமைச்சரவைக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தும் வரம் அதிபருக்கு இல்லை என்றார்.

அதனால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டமை  சட்ட விரோதமானது எனவும் அவர்  வாதிட்டார்.

இதன்போது  நீதியரசர் யசந்த கோதாகொட, மனுதாரர் தரப்பு சட்டவாளர் சுரேன் பெர்ணான்டோ, பிரதிவாதிகள் தரப்பின் சட்டவாளர்களான மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, அதிபர் சட்டவாளர்களான ரொமேஷ் டி சில்வா, காமினி மாரப்பன மற்றும் சானக டி சில்வா ஆகியோரை   நீதியரசர்கள் அருகே அழைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை மிக நெருக்கமாக கலந்துரையாடினார்.

இதனையடுத்து  சட்டவாளர் சானக  டி சில்வா  தொடர்ந்தும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் போது, 5 ஆம் பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர் ரொமேஷ் டி சில்வா, எழுந்து குறித்த சட்டவாளர் கேட்டுக் கொண்ட நேரத்துக்கும் கூடுதலாக நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும்,  அதனால் நீதிமன்ற நேரம் வீணாவதாகவும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும் சட்டவாளர் சானக டி சில்வாவுக்கு தொடர்ந்து கருத்துக்களை முன்வைக்க  நீதியரசர் யசந்த கோதாகொட அனுமதியளித்தார்.

இதனையடுத்து மீள விடயங்களை தெளிவுபடுத்திய சட்டவாளர் சானக டி சில்வா, தனது சேவை பெறுநர் தற்போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் நிலையில், அவர் கூட கோத்தாபயவின்  இரட்டை குடியுரிமை தொடர்பிலான ஆவணங்களை இதுவரை கண்டதில்லை என தெரிவித்தார்.

சுமார் 3 மணி நேரம் விடயங்களை தெளிவுபடுத்திய  சட்டவாளர் சானக டி சில்வாவின் வாதங்களின் நிறைவில் சிறு இடைவேளை ஒன்றினை அறிவித்த நீதிமன்றம், அதனையடுத்து 5 ஆம் பிரதிவாதியான கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர் ரொமேஷ் டி சில்வாவுக்கு வாதிட சந்தர்ப்பம் அளித்தது.

இதன்போது அவர்,  “அரசியலமைப்பு மீயுரரானது என்ற போதிலும் அதனையும் விட  பொது மக்களின் அதிகாரம் உயர்ந்தது என்றார்.

அத்துடன் ‘  17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம்  பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபருக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அதன்படி அமைச்சர்களை நியமிப்பது, அவர்களுக்கான பொறுப்புக்களை சாட்டுவது,  போன்று  தனக்கு தேவையான அமைச்சுக்களை தன் வசம் வைத்திருக்கும் அதிகாரமும் அப்போது அதிபருக்கு இருந்தது.

அந்த அரசியலமைப்பு விதிகளின் கீழ்,  அதிபருக்கு தனக்கு தேவையான விடயங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அதே போல்  ஒரு அமைச்சருக்கு பொறுப்புச் சாட்டப்படாத விடயம் ஒன்று அதிபரின் கீழேயே இருக்கும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.’ என்றார்.

இதன்போது தலையீடு செய்த நீதியரசர் யசந்த கோதாகொட, தற்போது 19 ஆவது திருத்தம் அமுலில் உள்ள சூழலில் அதிபருக்கு  தனது அதிகாரத்தில் உள்ள 3  விடயதானங்களுக்கு மேலதிகமான ஆவணங்களில்  கையெழுத்திட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சட்டவாளர்  ரொமேஷ்  டி சில்வா ‘ தற்போதைய  அரசியலமைப்பின் கீழ், அந்த இயலுமை இல்லாமல் இருந்தாலும் கூட, 2005 ஆம் ஆண்டு அமுலில் இருந்த 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய அதற்கான இயலுமை இருந்தது.

2005 நொவம்பர் மாதம் 21 ஆம் நாள்,  கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம்  அப்போது நிறைவேற்று அதிபரான மகிந்த ராஜபக்சவுக்கு இருந்தது.

குறித்த நாளில் எனது சேவை பெறுநருக்கு மேலதிகமாக அவர் மேலும் 20 பேரின் குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். அப்படியானால்  அன்றைய தினம் குடியுரிமை சான்றிதழ் பெற்றுக்கொண்ட  ஏனைய 20 பேரையும் கூட இந் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியாதா?

இந்த மனு மீது சிறிது அவதானம் செலுத்துங்கள். இம்மனுவில் மூன்றாவது பிரதிவாதி அமைச்சர் வஜிர அபேவர்தன. அவரது பெயரின் முன்னாள் ‘கெளரவ’ எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் 6 ஆவது பிரதிவாதி இந் நாட்டில் இரு முறை அதிபராக இருந்தவர். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்.  அவரது பெயரின் முன்னால்,  அந்த கெளரவ பதம்  இடப்படவில்லை.

ஏனெனில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு  மிக நெருக்கமான இரு மனுதாரர்களும், இந்த மனுவை  அரசியல் உள்நோக்கத்திலேயே தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுதாரர்கள் கோத்தாபய ராஜபக்சவை சிறையில் தள்ள கடுமையாக முயன்றவர்கள்.

அண்மையில் கோத்தாபயவை கைது செய்ய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக வெளியான செய்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்து பின்னர் அது போலியான செய்தி என்பதை அறிந்து வருத்தப்பட்டவர்கள். இவ்வாறான அரசியல் உள் நோக்கத்துடனேயே இந்த மனுதாரர்கள் இடைக்கால தடை உத்தரவுகளை கோருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு நொவம்பர் 21 ஆம் நாள்  அப்போதைய அதிபரான  6 ஆவது பிரதிவாதி மகிந்த ராஜபக்ச இந்த குடியுரிமை சான்றிதழில் கையெழுத்திட்டமை  தவறான நடவடிக்கை எனில்,  30 ஆண்டு கால போரை  நிறைவு செய்த போது, கடந்த 15 ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகள்  ஏன் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை’என சட்டவாளர் ரொமேஷ் டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அவரது வாதங்கள் நிறைவுக்கு வந்த நிலையில், இன்று மீண்டும் இந்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்றுவருகின்றன.