Home செய்திகள் சஜித் தெரிவானது மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு:

சஜித் தெரிவானது மகிழ்ச்சி அளிப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு:

134
0

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை ஊட்டுகின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், நீதியரசரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

சஜித் இளம் வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் தாராள மனப்பாங்குடைய ஆரம்பகாலக் கல்வியைப் பெற்றவர். ஆனால் அவர் காலத்தில் வகுப்புகள் மொழிரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. எங்கள் காலத்திலோ சகல இன மக்களும் ஒரே வகுப்பில் இருந்தோம். ஒருமொழி எம்மைப் பிணித்தது (ஆங்கிலம்). தருணசவிய மூலம் இளைஞர்களுடன் அவர் வெற்றி கண்டுள்ளார். ஜனசுவய, சசுனட அருண போன்றவற்றையும் அவர் நடத்தியுள்ளார். அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோ நிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம்.

முதலாவதாக அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம். அடுத்தது நிறுவன மயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை.

வடக்கில் இந்து சமயமானது ஆதி காலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளது. அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம். “உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்” என்பதே இந்துமக்களின் கருத்து வெளிப்பாடு. அதனால்த்தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள்.

இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பதுஉண்மையே. ஆனால் வடகிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு. 

இலங்கை அரசியல் யாப்பானது புத்தரின் போதனைகளை ஆங்காங்கே உட்புகுத்தியிருக்கலாம். ஆனால் நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தமை தவறென்று நான் பலமுறை கூறியுள்ளேன். நிறுவன மயப்படுத்தப்பட்ட பௌத்தம் வேறு, புத்தபெருமானின் போதனைகள் வேறு. முல்லைத்தீவில் பொதுபலசேனா இயற்றிய கூத்துக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றின் குற்றவியல் தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.