
சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில் அங்கு பாரிய போராட்டமும், தற்கொலை முயற்சியும் இடம்பெற்றுள்ளது.
தற்காலிக அடிப்படையில் ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக பணிபுரிந்த சுமார் 800 வரையான சுகாதார தொண்டர்கள் குறித்த நிகழ்வு மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே பதட்டம் நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிக்கொண்டு இருக்கும் வேளையில், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்களை மாற்று வழியில் நிகழ்விற்கு ஏற்பாட்டாகியிருந்த சாவகச்சேரி நகராட்சி மன்றத்யின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் அங்கு நின்றவர்களால் அது தடுக்கப்பட்டு குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.


