Home செய்திகள் வல்வை படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு இன்று!

வல்வை படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு இன்று!

232
0

அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்த இந்திய இராணுவத்தினரால் ஈவிரக்கமின்றி வல்வையில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு இன்றாகும்.

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர்.

யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.

இச் சம்பவத்தில் 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.