Home செய்திகள் வடமராட்சியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

வடமராட்சியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

123
0

யாழ் – வடமராட்சியின், தம்பசிட்டி பகுதியில் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தம்பசிட்டி, கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதியைச் சேர்ந்த ஜெகநாத குரு கிருபாலினி (வயது -35) என்பவர் ஆவார்.

குறித்த சடலம் அப்பகுதி தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நேற்று (27/07) முற்பகல் பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் உ. மயூரதன், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? எனத் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.

“கைகள் பின் பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. கால்களும் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் பஞ்சாபி சோல் ஒன்று சுற்றப்பட்டிருந்தது.

இவர் யாழ்ப்பாணம் பொலிஸ் திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையாற்றுகிறார். அவரது கணவர் பூசகர். தற்போது அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறார்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் சுப்ரமணியம் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய நடாத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அந்தப் பெண்ணே தனது கைகளை வாயால் கயிறுகொண்டு கட்டி, காலின் கீழாக கைகளை பின்புறம் எடுத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார் என்றும், இதனால் இறப்பு இடம்பெற்றுள்ளது என்றும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.