Home முக்கிய செய்திகள் ஆறு விடையங்களை உள்ளடக்கி “எழுக தமிழ்” : விக்கியின் வேண்டுகோள்

ஆறு விடையங்களை உள்ளடக்கி “எழுக தமிழ்” : விக்கியின் வேண்டுகோள்

206
0

தமிழர் முன் தவிர்க்க முடியாத விடையங்களாக உள்ள முக்கிய ஆறு பிரச்சனைக்களுக்கு தீர்வுகாண வேண்டியும், நியாயம் கோரியும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் எழுக தமிழ் நிகழ்வுகளை வடக்கு கிக்கில் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணை தலைவரும் , வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

  1. 1. நில ஆக்கிரமிப்பு,
  2. 2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்கு நிலை,
  3. 3. அரசியல் கைதிகளின் விடுதலை,
  4. 4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறாமை,
  5. 5. இராணுவமயமாக்கல்
  6. 6. மீள்க்குடியமர்வு

போன்ற ஆறு விடயங்களை உள்ளடக்கியே “எழுக தமிழ்” எனும் மாபெரும் தமிழர் எழுச்சியை நடாத்த விக்கி வலியுறூத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்,

அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந் நாட்டில் எமது தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசியல் கட்சிகளின் சுயநல அடிப்படையிலான போட்டி அரசியல் ஒருபுறம்;; மறுபுறத்தில் தமிழ் மக்களின் இருப்பை வடக்கு கிழக்கில் இல்லாமல் செய்யும்பொருட்டு அரசாங்கத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளும், சிங்களக் குடியேற்றங்களும், பௌத்தமயமாக்கலும் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன. 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட எமது மக்களுக்கு எந்தவித நீதியோ தீர்வோ வழங்கப்படவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியான பாதையில் நெறிப்படுத்திப் போராட்டப் பாதையை செம்மைப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. சந்தடி இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்துக்கு எதிராக எமது மக்களின் எதிர்ப்புக்களை வலுவூட்டுவது காலத்தின் கட்டாயமாகும். எமது அல்லல்களையும் துன்பங்களையும் தொலைதூரத்தில் இருக்கும் எமது சக பூகோள பிரஜைகளுக்கும் அதிகார மையங்களுக்கும் கொண்டுசென்று நடந்த மற்றும் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக அவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும். எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்களை நாம் வெளி உலகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்துகின்றோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு யதார்த்த நிலையை அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு எமது வலிகளை அவர்களின் வலிகளாக உணரும்படி செயற்படுகின்றோமோ, அப்பொழுதுதான் ஏனைய சமூகங்களை நாம் எம்மை நோக்கி கவனம் செலுத்த வைக்கவும் எமக்காக செயற்படவும் வைக்க முடியும். எமது துன்பங்கள், துயரங்களை எடுத்துக்கூறி ஒரு பகிரப்பட்ட மனிதநேய உணர்வை சர்வதேச ரீதியில் ஏற்படுத்துவதற்குப் பாடுபடும் அதேவேளை, அநியாயங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைளையும் நாம் வலுப்படுத்தவேண்டும்.
நான் முதலமைச்சராக இருந்தபோது என்னைக்காண வந்த அத்தனை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அரச தூதுவர்களுக்கும் எமது நிலை பற்றிக் கூறியது மட்டுமன்றி எழுத்து மூலமாகவும் பல விபரங்களை; ஆவணங்கள் மூலம் தெரிவித்து வந்தேன். இலங்கையின் உண்மை நிலை பற்றி அறிய வேண்டுமானால் வட மாகாண முதலமைச்சரிடமே கேட்க வேண்டும் என்று ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி கூறியதாக இன்னொரு நாட்டின் பிரதிநிதி கூறியிருந்தார். பதவிக்காலம் முடிந்ததும் அவ்வாறான சந்திப்புக்கள் மிகவும் குறைந்து போய்விட்டன. எனினும், கனேடிய, பிரித்தானிய உயர்மட்ட பிரதிநிதிகள் வந்து என்னை என் வீட்டில் சந்தித்துள்ளனர். ஆகவே, எமது குரல் தொடர்ந்து ஒலிக்க நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அத்துடன், மேலும் இரு வருடங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந் நேரத்தில் இரண்டு வருடங்களின் பின்னர் சபையில் அங்கம் வகிக்கப் போகும் நாடுகளை இப்பொழுதிருந்தே சந்தித்து எமது குறைகளை அவர்களிடம் கூறி அடுத்;த முறை மேலும் கால நீட்சி தராமல் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தவகையில், தமிழ் மக்கள் பேரவைக்கு முன்பாக ஒரு பெரும் பணி காத்துக்கிடக்கின்றது. இங்கு கூட்டங்களை நடத்துவதும் பின்னர் கலைந்து செல்வதுமாக நாம் எமது காலங்களை இனிமேலும் கடத்திச்செல்ல முடியாது. நாம் கடந்த காலங்களில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள் உட்பட பல பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் எமது சமூகத்தின் அங்கங்களான பல்கலைக்கழகம், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், மீன்பிடி சமாசங்கள், விவசாயிகள் சம்மேளனங்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தமிழ் சிவில் சமூகம் போன்ற பலவற்றுடன் இணைந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மீண்டும் எழுச்சியுடன் முன்னெடுக்கவேண்டியுள்ளது. சில காலம் நாங்கள் சற்றுத் தடுமாற்றத்தில் இருந்து வந்தோம். இனி அதற்கு இடமில்லை. நில ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, மத்திய அரச திணைக்களங்களின் உள்ளீடல், தமிழ்ப் பேசும் மக்களிடையே பிளவுகள் ஏற்படுத்தும் ஆள்பவர்களின் சூழ்ச்சி ஆகியன மிக வேகமாக எம்மைப் பாதித்து வருகின்றன. இராணுவத்தினரின் தலையீடுகளும் தற்போது புதிய உத்வேகத்துடன் நடைபெற்று வருகின்றன.

எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்கு நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறாமை, இராணுவமயமாக்கல் மற்றும் மீள்க்குடியமர்வு போன்ற ஆறு விடயங்கள் தொடர்பில் நியாயம் கோரி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றேன்.

தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் மிகப்பெரும் அளவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதுடன் வடக்கு கிழக்கின் ஏனைய எல்லா இடங்களிலும் அரச திணைக்களங்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. பாரிய ஒரு செயல்திட்டத்தை நாம் மாகாண சபையில் இருந்தபோது நடைமுறைப்படுத்த விழைந்தபோது எம்மால் அடையாளம் காட்டப்பட்ட காணியை வன திணைக்களத்திற்கு சொந்தம் என்று கூறி அந்த செயல்திட்டம் நிறுத்தப்பட்டது. அவ்வளவுக்கும் குறித்த காணிக்கும் வன திணைக்களத்திற்குமிடையில் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு அபகரிக்கப்படும் நிலங்களில் பௌத்த மயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின்போது எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக நல்லாட்சி என்ற முகமூடியை அணிந்து கொண்டு கடந்த 5 வருடங்களில் இந்த அரசாங்கம் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் மேற்கொண்ட தீர்மானத்தை முற்றிலும் உதாசீனம் செய்துள்ளதுடன் எமது மக்களுக்கு எதிராக கட்டமைப்பு ரீதியானதும், கலாசார ரீதியானதுமான இனப்படுகொலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அரச படைகளுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை முற்றாக நிராகரித்துள்ள அரசாங்கம், யுத்தத்தில் ஈடுபட்ட எமது இளைஞர்களை நீண்டகாலமாக சிறைகளில் அடைத்துவைத்து தண்டனைக்கு உட்படுத்தி வருகின்றது. சாத்வீக வழிகளில் சிறைகளில் பல தடவைகள் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை.
இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு வலியுறுத்தி எமது மக்கள் வீதிகளில் நின்று பல வருடங்களாக மேற்கொண்டுவரும் போராட்டங்களை அரசாங்கம் கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளவில்லை.

சுமார் ஒரு லட்சம் வரையிலான இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டு நில அபகரிப்பு, சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கி வருகின்றனர்.
யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்டுள்ளபோதிலும் இடம்பெயர்ந்துள்ள எமது மக்கள் முழுமையாக மீளக்குடியமர்தப்பப்படவில்லை. இராணுவம் எமது மக்களின் காணிகளிலும் வீடுகளிலும் குடியிருக்க எமது மக்கள் இடம்பெயர் முகாம்களில் பல வருடங்களாக இன்னல்களை அனுபவித்துவருகின்றனர்.

இவை எல்லாமே இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை முற்றிலுமாக இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் நன்கு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கான நிகழ்ச்சித்திட்டத்தின் பரிமாணங்களே.

ஆகவேதான், இந்த அடக்குமுறைகளையும், அநியாயங்களையும் இவற்றுக்கான எமது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் காட்டும் அதேவேளை சர்வதேச சமுகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இனப்படுகொலைக்கு எதிரான ‘எழுக தமிழ்’ நிகழ்வு போன்ற நிகழ்வுகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கின் முக்கிய இடங்களில் நாம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். இது தொடர்பில் அண்மைக்காலமாக பல புத்திஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் என்னை வலியுறுத்தி வருந்திருக்கின்றார்கள். எம்முடன் பயணிக்கும் சக அரசியல் கட்சிகளும் இது பற்றிக் கூறியுள்ளார்கள். நில அபகரிப்பு நடவடிக்கைகள் அரச மயமாக்கப்பட்டு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் கால தாமதம் இன்றி இந்த நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது எனது கோரிக்கை. செப்டெம்பர் மாதத்தில் முதலாவது நிகழ்வை நடத்தலாம் என்று அபிப்பிராயப்படுகின்றேன்.

இது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன். இந்தக் கோரிக்கை சம்பந்தமாக நீங்கள் உடன்படுவீர்களானால் இது தொடர்பில் ஒரு செயற்குழுவை அமைத்து ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை நாம் உடனடியாக ஆரம்பிக்கலாம். ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுடன் மட்டும் நின்று விடாமல் நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தி அவற்றை வெளியீடு செய்யும் நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். மேலும், நில ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இந்த நிகழ்வுகளுக்கு அழைப்பது பற்றி ஆராய்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் பணியாற்றிவரும் உலகளாவிய அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றலாமா என்பதைப் பற்றியும் ஆராய்ந்து அறிவுரை வழங்குவீர்களாக.

அண்மையில் கிழக்கு சென்றிருந்தேன். கல்முனை பிரதேச சபையைத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெற்ற நாளன்று தமிழர் தம் கோரிக்கை சார்பான நடவடிக்கைகளை உடனே எடுக்க கொழும்பில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனவாம். வாக்கெடுப்பு முடிந்து அடுத்த நாளே அமைச்சரின் கட்டளை ஒன்று அவசர அவசரமாகக் கல்முனைக்குச் சென்றடைந்தது. அதாவது முதல் நாள் ‘செய்யுங்கள்’ எனக் கூறப்பட்ட அனைத்துச் செயல்களையும் ‘நிறுத்துங்கள்’ எனப்பட்டதாம். எவ்வளவு இலேசாக எம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எமது இனம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை நாம் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவை மக்களைத் திரட்டி எமது மனநிலையை ஊர், உலகத்திற்கு உரக்கக்கூறி; வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகின்றது என்று அறிவித்து உங்கள் கருத்துக்களைக் கேட்கும் ஆவலில் எனது சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.