
சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய சிறிலங்காவின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக சிறிலங்காவின் வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய வரைபடத்தில், துறைமுக நகரம் உள்ளிட்ட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் உங்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த விகாரைகள், சிங்களக் குடியேற்றங்கள், புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்ட போதும் தற்போதே அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இருந்து வரைபடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.