Home செய்திகள் கன்னியா விவகாரம் தொடர்பில் தென்கயிலை ஆதீனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

கன்னியா விவகாரம் தொடர்பில் தென்கயிலை ஆதீனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

230
0

கன்னியா விவகாரம் தொடர்பில் தென்கயிலை ஆதீனம் ஊடக அறிக்கை ஒன்றினை இன்று (20/07) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

திகதி – 20.07.2019

ஊடக அறிக்கை

தென்கயிலை ஆதினத்தினால் கடந்த 16.07.2019 அன்று கன்னியா பிள்ளையார் கோவிலை மையப் படுத்தி அமைதி வழியில் ஒழுங்கமைக்கப்பட்ட கவனயீர்ப்புக்கும் சமய வழிபாட்டுக்கும் வடக்கு கிழக்கிலிருந்து பங்கேற்க வந்த, பல்வேறு சிரமங்கள் மத்தியில், உங்கள் ஒவ்வொருவருக்கும் தென்கயிலை ஆதினம் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கன்னியா பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்வதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக் கவனயீர்ப்பும் சமய வழிபாடும் உப்புவெளி காவல்துறையினரால் தடை செய்யப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தடையுத்தரவிற்கான ஆவணம் சிங்கள மொழியிலேயே வழங்கப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கின் பாவனை மொழியாக தமிழ் இருக்கின்ற போதும் சிங்கள மொழியில் தடையுத்தரவு வழங்கப்படுவது விசனத்திற்குரியது மட்டுமல்ல சிங்கள – பௌத்த காலனித்துவ ஆதிக்கத்தின் நீட்சியாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. 1956ம் ஆண்டு ‘சிங்கள மொழி மூலம்’ மட்டும் நடைமுறையில் இருப்பதான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் சைவ சமய முறைப்படி சென்ற பக்தர்களும் துறவி;களும் தடுக்கப்பட்டதை வெறுமனே உதிரியான செயற்பாடாக மட்டும் உற்று நோக்க முடியாது. இச் செயற்பாடு உதிரியாக கன்னியாவில் மட்டும் நடைபெறவில்லை இது நீராவியடிப் பிள்ளையார் கோவில், முல்லைத்தீவு, கந்தசாமி மலையடி தென்னவன் மரபு அடி போன்ற பல சைவ மதத் தலங்களுக்கு நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நடவடிக்கை. சைவ கோவில் இருந்த இடத்தில் வழிபாடு செய்வதனால் நாட்டின் மதங்களுக்கு இடையேயும் இனங்களுக்கு இடையேயும் அமைதியும் நல்லிணக்கமும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் தமிழர்களுக்குரிய மத உரிமையை (வழிபடுகின்ற) மறுப்பது என்பது சிறிலங்காவின் ஒற்றையாட்சி தன்மையை வலியுறுத்துகின்றது. அதன் பல்லினத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது அல்லது மறுக்கப்படுகின்றது எனக் கொள்ள இடமுண்டு.

சிறிலங்கா பின்-முள்ளிவாய்க்கால் தளத்தில் மொழி, மதம், இனம் சார்ந்து (சிங்கள-பௌத்தம்) பல்லினத்தன்மையை மிக வீரியமாக ஒதுக்கித் தள்ளும் பாங்குடைய அணுகுமுறையை கடினமாகப் பின்பற்றுகின்றது என்பதற்கு வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களும் கட்டப்பட்ட பௌத்த விகாரைகளும் சான்றுகளாக அமைகின்றன. சிறிலங்கா அரசின் பிரேத்தியேக தேசியம்(நுஒஉடரளiஎந யெவழையெடளைஅ) சிங்கள இனம், சிங்கள மொழி, சிங்கள தேரவாத பௌத்தம் இவற்றிற்கு மட்டுமே சிறிலங்கா உரியது என்ற கோரிக்கை ஏனைய இனங்களின் ஒழிப்பிற்கான உள் நோக்கை (iவெநவெ) தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இன்னொரு மத வழிபாட்டு உரிமையை மறுத்து, அதை சிங்கள மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்து, அதனூடு தமிழ் மக்களதும் ஏனைய சிறுபான்மை மக்களதும் அரசியல் கோரிக்கைகளை சிங்கள தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சோடித்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்தும் உத்தி சிறிலங்கா அரசுக்கு புதியது அல்ல.  

அதே உத்தியை கையாண்டு சிறிலங்கா அரசின் காவல்துறை, நீதித்துறையை தன்னகத்தே கொண்டு பெரும்பான்மையினரையும் அவர்களது நலன்களையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவது இது முதல் தடவையுமல்ல.

ஏற்கனவே ஊடக அறிக்கையில் குறிப்பிட்ட படி சிறிலங்கா அரசு தமிழர் வரலாற்றை மகாவம்ச மைய வரலாறாக திரிபுபடுத்த முயற்சிக்கின்றது. சிறிலங்காவில் பௌத்தம் என்றாலே அது சிங்கள தேரவாத பௌத்தம் மட்டுமேயான தோற்றத்தை உருவாக்கி தமிழ் பௌத்தர்களின் வரலாற்று இருப்பினை இருட்டடிப்பு செய்வதோடு பௌத்ததிற்கு முன்னரான தமிழர்களின் இருப்பை மறுக்க முயலுகின்றது. பௌத்த வருகையின் முன்னரான சைவத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தி வரலாற்றியலின் உண்மைத்தன்மையில் சந்தேகத்தை உருவாக்கி அதனூடு சிங்கள-பௌத்த மைய வரலாற்றைக் கட்டமைப்பது சிறிலங்காவின் மிக நீண்ட கால தந்திரோபாயமாக இருந்து வந்துள்ளது. இதற்கு தொல்லியல் திணைக்களம் மிக முனைப்புடன் இயங்கி இவ்வரசின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு துணை போகின்றது. 

சிறிலங்காவின் நீதித்துறையும் காவல்துறையும் அதன் படை கட்டுமானங்களும் பெரும்பான்மை சார்பு நிலைப்பாட்டை வரலாற்று ரீதியாக எடுத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இப்பெரும்பான்மை இன சார் நிலைப்பாடு பெரும்பான்மையினரின் உயர் மனப்பாங்கிற்கு உயிர் ஊட்டமளித்து பெரும்பான்மையினiரை மற்றவர்களிலும் உயர்ந்தவர்களாக கருத இடமளிக்கின்றது. இவ்வாறாக தூய கலப்பற்ற ஆரிய இனமாக சிங்கள இனம் உருவாக்கப்பட்டு, ஏனைய இனங்கள் தரக்குறைவாக உருவகிக்கப்படுகின்றது. இவ்வுத்தி இனப்படுகொலை உள் நோக்கத்தை அணித்திரட்டலாக மாற்றி இன்னொரு இனப்படுகொலைக்கு வழிவகுக்கின்றது. பெரும்பான்மையின இயங்குதளத்தை கேள்விக்குட்படுத்தி தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளை வரலாற்றில் பதிவு செய்த நாளாக 16.07.2019 வெளிவந்துள்ளது. வன்முறையைத் தூண்டி விட்டு கலவரத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தமிழர்கள் அஹிம்சையை விரும்புகின்றார்கள் என்பதை வெளி உலகத்திற்கு தெரிவுபடுத்தி இருக்கின்றார்கள். தமிழர்களின் இருப்பையும,; அடையாளத்தையும் தக்கவைக்கின்ற, ஆழப்படுத்துகின்ற வன்முறையற்ற ஆன்மீக மக்கள் மைய கவனயீர்ப்புகள் தொடர்ந்தும் முன்னேடுக்கப்படும். அவற்றிற்கு நீங்கள் என்றும் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. 

தவத்திரு அகத்தியர் அடிகளார்,