Home முக்கிய செய்திகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்: மனோ

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிட மாட்டேன்: மனோ

222
0

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென நேற்றிரவு முடிவெடுத்தேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளை கேட்காமல் இனிமேல் தலையிடுவதில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இனிமேல் அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டும் செய்வேன். மக்கள் நலன்சார்ந்து நான் செயற்படுவதை சிலர் தவறாக அர்த்தப்படுத்துவதாலேயே மனவருத்தத்துடன் இந்த முடிவை எடுத்தேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அவசர பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, இதன்போது பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மனோ மேற்குறிப்பிடவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் எம்பீக்கள் ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள். அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பீக்கள் அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. எம்பி முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது. எம்பி சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனையோர் பணிப்பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடகிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன். இவை தவிர்ந்த வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன். இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன்.

புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன். இவை இன்று உண்மைகளாகி விட்டன. எனினும் இவற்றுக்கு இன்று காலம் கடந்து விட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் .