Home செய்திகள் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் பெளத்த புராதன சின்னங்கள் எதுவும் இல்லை: தொல்பொருள் திணைக்களம்

நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் பெளத்த புராதன சின்னங்கள் எதுவும் இல்லை: தொல்பொருள் திணைக்களம்

164
0

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரையின் தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவிக்கையில்;

கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருள் திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும்.

முல்லை நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரையின் தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருள் திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.

மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பௌத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பௌத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே இவ்வாறான பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க, 32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பௌத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும். என்றார்.