
வீதிவிபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான நாடளாவிய ரீதியிலான திட்டமொன்றின் அம்சமாக மது போதனையில் வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட ஒருமாத செயற்திட்டமொன்றை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த செயற்திட்டத்தில் சிறப்பாக செயற்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதைத் தெரிவித்தார்.
இந்த செயற்திட்டம் நாளை வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி )முதல் ஒரு மாதகாலத்திற்கு முன்னெடுக்கப்படும் என்று கூறிய அவர் மேலும் கூறியதாவது,
கடந்த வருடம் மாத்திரம் 1552 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1632 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலத்தில் இடம்பெற்ற 1281 வாகன விபத்துக்களில் 1374 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்தையும் விட இவ்வருடம் வாகன விபத்துக்கள் 271 எனும் அளவிலும் , உயிரிழப்புகள் 258 ஆகவும் குறைவடைந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்தும் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்ளவதற்காகவே இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளன.
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு பணப்பரிசுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் செல்லும் வாகனத்தை செலுத்திய சாரதியொருவர் மது போதையில் கைது செய்யப்பட்டால் அந்த கைதை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 5000 ரூபாய் பணப்பரிசும் ,தனி நபர் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 2500 ரூபாவை பணப்பரிசாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக கைது செய்யப்படும் சாரதிகளுக்கு சாதகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இவ்வாறு சாராதிகளுக்கு ஆதரவாக தொடர்பு கொள்ளும் நபர்கள் சம்மந்தமான தகவல்களை பெற்றுக் கொண்டு அது தொடர்பான அறிக்கையொன்றை போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை சமர்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்தியதாக கைது செய்யப்படும் சாரதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் நீதிவான் நீதிமன்றத்தினால் நிருபிக்கப்பட்டால் சாரதி அனுமதிப்பத்திரம் குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்யப்படுவதுடன் இவரிடமிருந்து 25ஆயிரம் ரூபா வரை தண்டப்பணமும் அறவிடப்படும்.