Home முக்கிய செய்திகள் தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட நிலையான இணக்கத் தீர்விற்கான நேரம் வந்துவிட்டது: எரிக்

தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட நிலையான இணக்கத் தீர்விற்கான நேரம் வந்துவிட்டது: எரிக்

167
0

இலங்கை அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு சலித்துப்போன பாராளுமன்ற அரசியலுக்கும் போருக்கும் இடைப்பட்டதான பயனுறுதியுடைய மூன்றாவது பாதையொன்றைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

அத்தகையதொரு பாதை வன்முறையற்ற, ஒன்றிணைந்த சிவில் நடவடிக்கையாகப் பெருமளவிற்கு இருக்கலாம் என்று நோர்வேயின் இராஜதந்திரியும், சர்வதேச சமாதான முயற்சியாளருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார்.

தமிழர் பிரச்சினைக்கு நிலையான இணக்கத் தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதன்மூலம் காணப்பட வேண்டிய தீர்வு இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும். அது ஒரு சமஷ்டி வகைமாதிரியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபட்ட சர்வதேச சமூகத்தினால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமாக இன்னமும் விளங்கும் சொல்ஹெய்ம், திருகோணமலை மூலோபாய கற்கைகள் நிலையத்தின் இணையத்தளத்திற்கு திங்கட்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இலங்கைத் தேசிய பிரச்சினை தொடர்பிலான தனது தற்போதைய அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

இலங்கையில் தமிழi; பிரச்சினைக்கு நிலையான இணக்கத்தீர்வொன்றை நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டதாக அத்தகைய தீர்வு அமைய வேண்டும். அது சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையலாம்.

சிங்கள அரசியல் தலைமைத்துவத்திடம் அரசியல் தொலைநோக்கும், ஒத்துழைப்பும் இல்லாமை எமது அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு ஒரு காரணம். மற்றொரு காரணம் சமஷ்டி முறையொன்று தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கு விடாப்பிடியாக பிரபாகரன் தயக்கம் காட்டியமையாகும். அரசியல்வாதிகள் நாட்டின் எதிர்காலத்தை நினைவில்கொண்டு தொலைநோக்குடனும், இராஜதந்திர விவேகத்துடனும் உண்மையான தலைவர்களாக மாறவேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது.

சர்வதேச சமூகம் அரசியல் இணக்கத்தீர்வொன்றுக்கான சில நெருக்குதல்களைக் கொடுப்பதில் உதவமுடியும். ஆனால் அரசியல் முழுவதுமே உள்நாட்டு விவகாரம். இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகள் உள்நாட்டில் உள்ளவையாக இருக்கமுடியும்.

இலங்கையில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல் கட்சிகளுமே வெளிச்சக்திகளின் மறைமுகக் கையாட்களாக இல்லை. இலங்கையர்களே தங்களது சொந்தத் தலைவிதியின் ஆசான்கள்.

சலித்துப்போன பாராளுமன்ற அரசியலுக்கும், போருக்கும் இடைப்பட்ட மூன்றாவது ஒரு பாதையைக் கண்டறிய வேண்டிய தேவை தமிழ் தலைமைத்துவத்திற்கு இருக்கிறது. அத்தகைய பாதை அஹிம்சை மார்க்கத்திலான – கூடுதலான அளவிற்கு ஒருங்கிணைந்த சிவில் நடவடிக்கை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

நான் இப்பொழுது இலங்கை விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தானத்தில் இல்லை. தொலைதூரத்திலிருந்து கருத்துக்களை மாத்திரமே கூறிக்கொண்டிருக்கிறேன். இலங்கைத் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு சாத்தியமான எந்தவொரு வழியிலும் ஆதரிப்பதற்கு நான் மகிழ்ச்சியுடன் முன்வருவேன்.