
படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தத்தின் (சோபா) மூலமாக அமெரிக்க படைகளுக்கு எமது நாட்டுக்குள் கட்டற்ற சுதந்திரமும், எமது வளங்களைப் அபகரிக்கும் அங்கீகாரமும் வழங்கப்படுமே தவிர, அதனால் நாட்டுக்கு எந்தவொரு அனுகூலமும் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என பலர் தெரிவித்துவருகின்றனர்.
அமெரிக்க அரசாங்கத்துடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசித்திருக்கும் சோபா ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அடங்கியுள்ள விடயங்கள் நாட்டின் இறையாண்மையையும், சுயாதீனத்துவத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இத்தகைய கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்ததுடன், இலங்கையுடன் அமெரிக்க மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சோபா உடன்படிக்கைக்கு அடுத்ததாக நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் எக்ஸா மற்றும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு ஆகிய இரு ஒப்பந்தங்களும் அமெரிக்காவுடன் கைச்சாத்திடத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.