Home செய்திகள் 35 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா உதவித் தொகை வழங்கிய தமிழ் மக்கள் கூட்டணி!

35 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா உதவித் தொகை வழங்கிய தமிழ் மக்கள் கூட்டணி!

193
0

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் அவர்கள் 35 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா உதவித் தொகையை வழங்கிவைத்தார்.

கனடா ‘வாணிபம்’ வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அன்பகம் ‘ மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் நிகழ்வின் போதே நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தனது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக இவ் உதவித்தொகையை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,

இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வு ஈகையின் சிறப்பை வெளியிடுவதாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்துங் கூட திரு. இரட்ணகுமார் வைத்தியநாதன் போன்றவர்கள் இங்கே வந்து கலந்துகொண்டிருப்பது எமது பாதிக்கப்பட்ட மக்கள் மீது கடல்கடந்த நாடுகளில் வசிக்கின்ற எமது உறவுகள் எவ்வளவு கரிசனை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க முன்வருவதே ஈகை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற நீண்ட கால தொடர் யுத்தத்தின் காரணமாக தேவையுடைய மக்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியுள்ளது. அரசாங்கம் உதவிகளை தருவதாக அறிவித்தும் எம் மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பதாக இல்லை.அரசாங்கம் தருபவை தகுந்தவர்களைப் போய்ச் சேருகின்றதா என்பதில் சந்தேகமே எழுகின்றது. ஆகவே தான் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் வழங்கப்பட வேண்டிய உதவு தொகைகளை வழங்குவதற்கு இவ்வகையான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையினால் அல்லல்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானித்திருக்கின்றோம். இருந்தும் கிடைப்பதை வஞ்சகமின்றி கொடுக்கவே காப்பகத்தினர் விரும்புகின்றார்கள்.

எம் மக்களின் மேம்பாடு தொடர்பில் நானும் எனது கட்சியும் அதீத அக்கறை உடையவர்களாக இருக்கின்ற போதிலும் இவர்களுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கட்சி என்ற ரீதியில் எம்மால் முடியாமல் இருந்தது.

எனினும் எமது அவாவையும் உதவித் திட்டங்களை வழங்குவதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகளையும் அவதானித்த அன்பர் ஒருவர் ஒரு தொகைப் பணத்தை ஆரம்ப உதவித் திட்டங்களுக்காக எமக்கு அனுப்ப முன்வைந்துள்ளார். அவர் தந்த நிதியை சமமாகப் பகிரந்தளிப்பதன் மூலமாக 35 அங்கத்தவர்களுக்கு தலா ரூபா 5000 வீதம் உதவித் தொகையை இன்று வழங்கயிருக்கின்றோம். இது மிகவும் சிறிய அளவிலான உதவு தொகையாக இருப்பினும் இந்த உதவித் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்கின்ற அல்லது கேள்விப்படுகின்ற மேலும் பல அன்பர்கள் தமது உதவிக்கரங்களை நீட்டுவார்கள் என எண்ணுகின்றேன்.

வெளிநாடுகளில் வாழுகின்ற பல அன்பர்கள் இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு நிதிகளை வழங்குவதற்கு விருப்பமுடையவர்களாக இருக்கின்ற போதிலும் தமது உதவு தொகைகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் பகிரங்கமாக ஒரு அழைப்பு விடுத்திருந்தோம். உங்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி மூலங்கள் அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு அதன் செலவீனங்கள் அனைத்தும் ஒரு விபரமான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு உங்களுக்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த விசேட வேலைத்திட்டத்திற்கென ஒரு ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் ஒருவரை கடமையில் அமர்த்தி கணக்கு வழக்குகள் அனைத்தும் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற செய்தியை உங்களுக்கு குறிப்பாக புலம்பெயர் மக்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். நான் முதலமைச்சராக கடமையேற்ற காலத்தில் இருந்து எனது பதவிக்காலம் முடியும் வரை பல தரப்பட்ட மக்கள் உதவிகளை வழங்கியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் உதவு தொகைகளுக்கான செலவு விபரங்கள் முறையாக எம்மால் அனுப்பி வைக்கபட்டிருந்தன.

செலவு விபரங்கள் எனக் குறிப்பிடும் போது நீங்கள் தவறாக எண்ணி விடக் கூடாது. உதவிகள் அனைத்தும் தேவையுடைய மக்களுக்கான உதவு தொகைகளாகவே செலவிடப்பட்டுள்ளன. அத் தொகைகளிலிருந்து எமது நிர்வாக செலவுகளுக்கோ பதில் கடிதங்கள் அனுப்புவதற்கான செலவுகளுக்கோ கூட ஒரு சதமேனும் எம் மக்களின் உதவு தொகைகளில் இருந்து செலவு செய்யப்படவில்லை என்பதை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்களின் உடமைகளை உறவுகளை அழித்து ஏதிலிகளாக்கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். எவர் எவர்களின் வீடுகளை அரசபடைகள் அழித்து நிர்மூலமாக்கியதோ அவர்களுக்கான வீடுகள் அம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலக நியமங்களிற்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்களைப் பயங்கரமாகப் பதம் பார்த்தது அரசாங்கமே. நாம் கேட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கங்கள் தந்திருந்தால் மக்கள் கிளர்ந்தெழத் தேவை எழுந்திருக்காது. அரச பயங்கரவாதம் எம் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது. இவைபற்றியெல்லாம் அரசுடனும் சர்வதேசத்துடனும் பலவழிகளில் பேசிப் பார்த்தாயிற்று.

எமது அனைத்து முயற்சிகளும் ஏதோ வகைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக நன்மை பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதனால்த்தான் எமது அரசியல்வாதிகளைக் காசு கொடுத்து வாங்க எத்தனித்திருக்கின்றது.

இந் நிலையில் எமது பாதிக்கப்பட்ட உறவுகளை தாங்கிக் கொள்ள அவர்களை பொருளாதார நிலையில் ஓரளவுக்காவது முன்னேற்றிவிட அவர்களின் மன அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க எம்மவர்களே முயற்சிக்க வேண்டும்.

கடல் கடந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் ஒரு முறையான வரைமுறையில் செயற்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். அதற்கு அனைவரும் கைகோர்த்து முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கின்றோம். மேலும் மேலும் எமது ஈகையானது பார் முழுதும் இருக்கும் எமது உறவுகளை பாதிக்கப்பட்ட எம் மக்களுடன் தொடர்புபடுத்துவதாக அமையவேண்டும். என்றார்.