
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது. ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டதன் பின்னர் இது நிறைவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் பல முறை அழுத்தம் கொடுத்தோம். இருப்பினும் அதை அரசாங்கம் உதாசீனம் செய்து விட்டது. பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக பல குற்றங்கள் சுமக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை வகிப்பது நாகரீகமற்றது. இதை அவரும் உணரவில்லை இந்த அரசாங்கமும் உணரவில்லை. இதன் தாக்கத்தை உணர்ந்த அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.