Home செய்திகள் மரணச் சடங்கில் சடலத்தை எடுத்துச் சென்ற காவல்துறை!

மரணச் சடங்கில் சடலத்தை எடுத்துச் சென்ற காவல்துறை!

155
0

மரணச்சடங்கு ஒன்றில் திடீரென உள் நுளைந்த காவல்துறையினர் இறுதிக்கிரியைகளை தடுத்து நிறுத்தி சடலத்தை எடுத்து சென்றுள்ளனர்.

நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நாவலடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

67 வயதுடைய பெரியான் நாகேந்திரம் என்பவர் 4 மாதங்களுக்கு முன்பு துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது , மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். அதனையடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் சாவகச்சேரி வைத்திய சாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாத காலமாக படுக்கை நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவரை, கடந்த செவ்வாய் கிழமை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மறுநாள் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து இறுதி கிரியைகள் நடைபெற்றன.

அதனை அறிந்து வீட்டிற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர் , விபத்து வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது போது , தமக்கு அறிவிக்காது இறுதிகிரியைகளுக்கு ஏற்பாடு செய்த உறவினர்களை கடுமையாக எச்சரித்ததோடு, சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

அது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றிலும் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையை பார்வையிட்ட நீதிவான் , பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.