Home செய்திகள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்குமாறு முஸ்லீம் அமைச்சர்களிடம் பெளத்த பீடங்கள் வேண்டுகோள்!

மீண்டும் பதவிகளை பொறுப்பேற்குமாறு முஸ்லீம் அமைச்சர்களிடம் பெளத்த பீடங்கள் வேண்டுகோள்!

146
0

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மூன்று பௌத்த பீடங்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், நேற்று பிற்பகல் 2 மணி யளவில் மகா சங்கத்தினர் கூடி நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 15 விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். சில விடயங்கள் தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், ஒன்றிணைந்த அறிக்கையொன் றையும் மகா சங்கத்தினர் வௌியிடவுள்ளனர்.

நேற்று எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஶ்ரீ விஜிதசிறி தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-

சிங்களம், தமிழ் , முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஸ்திரமான தகவலை உறுதிப்படுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். அதுவே எமது கோரிக்கையாகும்.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை, இடம்பெற்று இருக்கக்கூடாத ஒரு விடயமாகும். அதனால் தங்களின் பொறுப்புக்களை ஏற்குமாறு குறித்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தீர்மானத்தையும் நாம் எடுத்துள்ளோம்.

அத்துடன், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பின், தாம் சுற்றவாளிகள் என்பதை அரசுக்கும் பாதுகாப்பு பிரிவுக்கும் நிரூபியுங்கள். இந்த நிலைமையை நாம் புரிந்து செயற்படாவிடின், வௌியே இருந்து எமது நாட்டுக்கு அழுத்தங்கள் நிச்சயமாக விடுக்கப்படும். எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.