
யாழில் இருவேறு இடங்களில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த 9 பேரும் பிறந்த நாள் கொண்டாத்தில் கலந்துகொண்ட சமயம் மறைவில் காத்திருந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்த “தனு ரொக்” என்பவரது பிறந்த நாள் என்ற தகவல் அறிந்து, யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகர் தினேஸ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு காவல்துறை பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.
மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து நவாலி வயல் வெளியில் பகுதியில் வைத்து மற்றொரு பகுதியினர் தனு ரொக்கின் பிறந்த நாளை கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தனு ரொக்கும் அடங்குவார்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்தவர்கள் எநவும், அவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறிய காவல்துறை கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.