
மக்களவை தேர்தலுக்கான பாதி வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் தேசிய அளவில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து உள்ளது. மீண்டும் காங்கிரஸ் போன தடவையை விட அதிகமாக பின்னடைவை சந்தித்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை நிலைமை அப்படியே தலைகீழாக மாறி பா.ஜ.க கூட்டணி பாரிய பின்னடைவை சந்திக்க காங்கிரஸ், கூட்டணியான தி,மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருக்கிறது. கேரளாவிலும் இதே நிலைதான்.
இந்த பெரிய கட்சிகளின் மோதலுக்கிடையே, பெரிய மாநில கட்சிகளே பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கும் நிலையில் தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை காட்டாவிடாலும், எங்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என காட்டிய வளர்ந்துவரும் கட்சிகளான நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் சீமானும், கமலஹாசனும் இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு இயக்கமாக, ஒரு கட்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக அரசியல் பாதையில் பயணித்து தனக்கென சீமான் ஒரு தனி அடையாளத்தை கொண்டு குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி கண்டுள்ளார். ஆரம்ப காலத்தில் காமெடிக்கு ஆளான சீமான் தற்போது தனது வீரியமான பிரச்சாரத்தின் மூலமாக மக்களை ஈர்த்து வருகிறார் என்பதோடு உண்மை நிலையை உரக்கச் சொல்லி வந்தால் வா, போனால் போ என்றவாறு கொண்ட கொள்கையில் சற்றும் மாற்றமின்றி தனது அரசியல் பயணத்தை அடிமட்ட மக்களிடம் இருந்து வளர்த்துவருவதே அவரின் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.
அதே போல் ஒரு சட்டமன்ற தேர்தலில் கூட கலந்துகொள்ளாமல் நேரடியாக நாடாளுமன்ற தேர்தலிலேயே போட்டியிட்டு தற்போது பல இடங்களில் கணிசமான வாக்குகளை ஒரு உடனடி அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். இதே வேகத்தில் அவர் பயணித்தால் சட்ட மன்ற தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நாற்காலியில் பங்கு கேட்க புதிதாய் இருவர் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர் என்பதை மற்ற அரசியல் கட்சிகளும் கவனிக்காமல் இல்லை.