Home முக்கிய செய்திகள் தமிழர் மீதான அவநம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகாலப் போருக்கு காரணம்: மைத்திரி

தமிழர் மீதான அவநம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகாலப் போருக்கு காரணம்: மைத்திரி

194
0

சகல தமிழரையும் புலிகள் எனக் கருதியதும், தமிழர் மீதான எமது அவ நம்பிக்கையுமே 30 ஆண்டு காலப் போருக்கு காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலையடுத்து நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையை நிகழ்த்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு கூறுகையில்,

பாதுகாப்பு அமைச்சின் பிரதான பதவிகளின் மாற்றங்களைச் செய்துள்ளேன். பாதுகாப்புப் படைகளுக்குச் சிறப்பு அதிகாரங்களைக் கொடுத்துள்ளேன். குற்றவாளிகளைக் கைதுசெய்யும் சகல நடவடிக்கைகளையும் முன்னேடுத்துள்ளேன். இன்று பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. 

இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் முக்கியமான தீவிரவாதிகள். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள், சொத்துக்கள் அனைத்தும் அரச உடைமையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறு உதவிகளை செய்த நபர்களுக்குப் பிரதான தீவிரவாதிகளால் ஒரு நபருக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளமை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

விமர்சனங்கள் இன்னும் இருக்கவே செய்கிறது. கண்மூடித்தனமாக இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் சகல தமிழரும் புலிகள் என்ற கருத்து உருப்பெற்றது. அதனால் எமக்குள் பிரிவு ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை அடுத்து தமிழ் இளைஞர்கள் புலிகளில் இணைந்தனர். நாம் தமிழர் மீதான அவநம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகாலப் போரை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

எனவே இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் எனத் தமிழர்களைப் பார்த்ததைப் போல் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் என்றோ அல்லது தீவிரவாதிகள் என்றோ பார்க்க வேண்டாம்.

தீவிரவாதம் என்பது உலகத்தில் எங்கு, எப்போது உருவாகும் என்பதை எவராலும் தெரிவிக்க முடியாது. உலகத் தலைவர்கள் எவராலும் அதை எதிர்பார்க்கவும் முடியாது. 

முஸ்லிம் மக்களைப் பார்த்தால் சிங்கள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் முஸ்லிம் மக்களும் அச்சத்தில் உள்ளனர். இந்தத் தாக்கம் தமிழ் மக்களையும் பாதித்துள்ளது எனபது அறிந்துகொள்ள முடிகின்றது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புபட்ட 150 இற்கும் குறைவான தீவிரவாதிகள் உள்ளனர் என்று புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. அவர்களுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதத்துக்குள் தள்ளுவதா என்பதை யோசிக்க வேண்டும்.என்றார்.