Home முக்கிய செய்திகள் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்:

பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் விக்கி வேண்டுகோள்:

183
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தை தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் அடைப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக இல்லாமல் செல்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கு இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்களின் காணிகளை அவர்கள் அபகரித்துள்ளனர். இது நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் வைத்திருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தீர்வு முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தற்போதைக்கு மாகாண சபைகளின் கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவன் மூலம் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களில் இருந்தும் எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதுடன் சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கையும் நாமே எமது பகுதிகளில் நிர்வகிக்க முடியும் . இதனைவிடுத்து,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சாட்டாக வைத்து இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிப்பது எந்தவகையிலும் பொருத்தம் அற்றது. மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையை பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்கு பொதுமக்களின் சுதந்திரங்களை பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம். இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை மீண்டும் இந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். பாராளுமன்றத்தில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாக கைகளை உயர்த்திவிட்டு இன்று எமது மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவர்களை விடுதலைசெய்யுமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.

ஆகவே, அண்மைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களையும் அவற்றுக்கு தூண்டுகோள்களாக இருந்தவர்களையும் இனம்கண்டு கைதுசெய்து சட்டத்தின்முன்பாக நிறுத்தி அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் இயன்றளவு விரைவாக அவசர கால பிரகடனத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறேன். பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தை பலப்படுத்துவதுடன் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.