Home தாயக செய்திகள் யாழ் பல்கலையில் 400 க்கும் அதிகமான இராணுவம் குவிப்பு!

யாழ் பல்கலையில் 400 க்கும் அதிகமான இராணுவம் குவிப்பு!

169
0

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகம் மற்றும் யாழ்,பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் விடுதி ஆகியன இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் இடம்பெற்று வருகிறது.

இன்று (03/05) வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கவச வாகனங்கள், பேரூந்துகள், ஜீப் போன்ற வாகனங்களில் வந்திறங்கிய படையினர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒவ்வொரு கற்கைநெறிக் கூடங்கள், பீடங்கள், வளாகம் என அனைத்து பகுதிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, காலை 7:00 மணியின் பின்னர் உள்ளே வருகை தந்த சில ஊழியர்கள், பேராசிரியர்கள் என அனைவரது உடமைகளும் சோதனை செய்யப்பட்டே உள்ளே அனுமதித்தனர்.

சம நேரத்தில் யாழ், போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவபீட மாணவர் விடுதியிலும் இதேபோல் தேடுதல்கள் இடம்பெற்றன.

இதன் போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கோப்பாய் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், மற்றும் மாவீரர்கள் சிலரின் படங்கள், விபரங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையிலேயே இக் கைது இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு அண்மித்து வரும் நிலையில் வழமை போல் அல்லாது இம்முறை சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறலாம் என்ற நோக்கோடும், இத் தருணத்தில் தற்போதைய நாட்டு நிலமையை சாதகமாக பயன்படுத்தி உள் நுளைந்து சோதனை நடவடிக்கைகளை செய்தால் சில தடயங்கள் கிட்டும், அதனை அடிப்படையாக வைத்து பல்கலைக் கழக மாணவர்களை கைதுசெய்யலாம், அச்சுறுத்தலாம் எனும் நோக்கோடு இத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிகிறது.