Home முக்கிய செய்திகள் 29 ஆண்டு யுத்தத்தில் நிதானமாக செயற்பட்ட புலிகள்: வட ஆளுநர்

29 ஆண்டு யுத்தத்தில் நிதானமாக செயற்பட்ட புலிகள்: வட ஆளுநர்

211
0

இலங்கையில் அண்மையில் நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சர்வதேச அளவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 3வது மிகப் பெரிய தாக்குதலாக அமைந்திருப்பதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சமகால நிலவரம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

21ம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலை தொடா்ந்து சிங்கள மக்கள், தமிழ் மக்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். அதற்கு பதிலாக முஸ்லிம் மக்கள் தாக்குதல் நடத்துவார்கள் அதன் தொடர்ச்சியாக ஒரு சிவில் யுத்தம் உருவாகும். என்பது தாக்குதல் நடத்தியவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பாக உள்ளது.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மேலும் இந்த தாக்குதலின் பின்னரான ஒரு வார காலத்திற்குள் 90 சதவீதம் இலங்கை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

இத் தாக்குதல்களில் 37 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சுமார் 500 வரையான அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. 29 வருடங்கள் இந்த நாட்டில் யுத்தம் நடந்த போதும், தமிழீழ விடுதலை புலிகள் ஒரு வெளிநாட்டவரை கூட கொலை செய்யவில்லை.

குறிப்பாக சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதலிலும் கூட புலிகள் மிக நிதானமாக நடந்து கொண்டார்கள், அங்கு எந்த வெளி நாட்டவரும் கொல்லப்படவில்லை.

இஸ்லாமிய பெண்களின் புர்க்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு சில விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல. அவை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரானவை.

குண்டு வெடிப்பின் பின்னர் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க மத தலைவர்களும் மிக அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.