Home செய்திகள் ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் தீவிரவாதிகள் போல் பார்ப்பது கவலையளிக்கிறது: தௌபீக் மௌலவி

ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் தீவிரவாதிகள் போல் பார்ப்பது கவலையளிக்கிறது: தௌபீக் மௌலவி

206
0

சில நபர்களின் கொடூரச் செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் தீவிரவாதிகள் போல் பார்ப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் கொல்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது என தேசிய தௌவீக் ஜமாத்தின் தலைவர் தௌபீக் மௌலவி தெரிவித்தார். 

காத்தான்குடியில் உள்ள தேசிய தௌவீக் ஜமாத்தின் பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் அங்கு தெரிவிக்கையில்,

இஸ்லாம் என்பது தெளிவான மார்க்கம். இஸ்லாத்தின் சட்டங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

சிறுவர்களையும் பெண்களையும் கொலை செய்யக்கூடாது என இஸ்லாம் தெளிவாக கூறியுள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல்களில் பல சிறுவர்களும் பெண்களும் உயிரிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டவர்கள் உண்மையான இஸ்லாமியராக இருக்கமுடியாது.

அதேவேளை தாக்குதல் நடாத்தியவர்கள் முஸ்லீம் நபர்களாக அடையாளம் காணப்பட்டாலும், முஸ்லீம் பெயர்களை கொண்டிருந்தாலும் அவர்கள் உண்மையான முஸ்ளீம்கள் இல்லை. அப்படியான குறித்த சில நபர்களின் கொடூரச் செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் தீவிரவாதிகள் போல் பார்ப்பது கவலையளிக்கிறது.

ஊடகங்கள் எமது அமைப்பின் மீது குற்றங்களை முன்வைத்தாலும் இந்த தாக்குதலுக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

மௌலவி ஷஹ்ரானால் 2012 ஆம் ஆண்டு தமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் 2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஏற்பட்ட கலவரம் ஒன்றை அடுத்து அவர் தலைமறைவாகி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வந்த நிலையில் அவரை தமது அமைப்பில் இருந்து நீக்கியதாகவும், அதன் பின் மௌலவி ஷஹ்ரான் என்பவருக்கும் தமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.