Home செய்திகள் காத்தான்குடி பள்ளிவாசலில் சோதனை – ஆவணங்கள் மீட்பு!

காத்தான்குடி பள்ளிவாசலில் சோதனை – ஆவணங்கள் மீட்பு!

193
0

தீவிரவாதிகளின் தளமாக கருதப்படும் காத்தான்குடி பள்ளிவாசலில் நேற்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தப் பள்ளிவாசல் நிருவாகத்தின் தலைவராக தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமும், செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசிம் என்பவரும் செயற்பட்டு வந்துள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர், குறித்த பள்ளிவாசல் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்படவில்லை என்றும், சமூக சேவை நிலையம் எனும் பெயரிலேயே இயங்கி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்று, இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவகம் மற்றும் அங்கிருந்த கணிணி ஆகியவற்றினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினருக்கும், மௌலவி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜனாத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றினை அடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.