Home செய்திகள் ஊடகவியலாளர் மீதான விபத்து, திட்டமிட்ட சதியா என விசாரணை செய்யுமாறு வடக்கு ஆளுனர் பணிப்பு:

ஊடகவியலாளர் மீதான விபத்து, திட்டமிட்ட சதியா என விசாரணை செய்யுமாறு வடக்கு ஆளுனர் பணிப்பு:

146
0

யாழ்-புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்து, உண்மையாகவே விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்று விசாரணை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நண்பகல் புலம்பெயர் சமூகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காக உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

படுகாயமடைந்த ஊடகவியலாளர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு சென்றதாகவும், ஊடகவியலாளர் கீழே வீழ்ந்த போதிலும், அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தாமல், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரனை நேற்றிரவு வடக்கு மாகாண ஆளுநர் யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டதுடன், குறித்த சம்பவம் சாதாரண விபத்துச் சம்பவமா? அல்லது திட்டமிட்ட தாக்குதல் சம்பவமா? என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.