
போர்க்குற்ற வழக்கு உட்பட பல வழக்குகள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கோத்தபாயவிற்கு எதிராக இருக்கும் நிலையில் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். என முன்னாள் ஆடியாளரும், தனது ஆட்சியின் போது போர் விதிகளை மீறி பாடசாலைகள் மீதும், ஆலயங்கள் மீதும் விமானக் குண்டு வீச்சுக்களை நடாத்தி மக்களை படுகொலை செய்தவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;
இங்கு இடம்பெற்றுவரும் பிணக்குகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் திட்டம் நிறைவேறாது போகும் நிலையே காணப்படுகிறது. அத்தோடு அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மகிந்த அணியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் அரச தலைவர் தேர்தல் தொடர்பாகக் கொக்கரிக்கத் தொடங்கி விட்டனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், போர் விதிமீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறையில் இருக்க வேண்டிய கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்துகொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கின்றார். அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரு பாரதூரமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க முயல்கின்றார். இரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அவர், அரச தலைவர் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.