
மன்னார் – மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் கவனிப்பார் அற்ற நிலையில் அடிப்படை வசதிகளின்றி காடுவாசிகள் போல் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறிய முள்ளிக்குளம் மக்கள் கடந்த 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இதுவரை முள்ளிக்குளம் பகுதியில் மீள் குடியேற்றப்படவில்லை.
தற்காலிக கொட்டில்களிலும், மரங்களின் கீழ் துணிகளின் மறைப்புகளுக்கு நடுவிலும் நிலையில் பூர்வீக குடிகளான தமிழர் நிலை உள்ளமை வேதனைக்குரியது.
பூரணப்படுத்தப்படாத கொட்டில்கள், பெண்கள் அதிகமாக இருக்கும் நிலையில் தங்களுக்கு என மலசல கூட வசதிகள் கூட இல்லை, எனவும் மழை காலங்களில் சேதமடைந்த கொட்டில்களில் தங்க முடியாத நிலை, குளம் நிரம்புவதால் வெள்ளப்பதிப்பு, மின்சாரவசதி இல்லாததால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள், என பல விடையங்களை சுட்டிக்காட்டி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே வேளை அருகிலே உள்ள சிறீலங்கா படை முகாம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதாகவும், சகல வசதிகளோடும் காணப்படுவதாகவும் இலங்கை அரசு தான் தம்மை கைவிட்டது என்றால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் கூட தம்மை கண்டுகொள்ளாது இருப்பது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையாவது செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.