Home கட்டுரை தமிழர் கட்டமைப்பு சிதைப்புகளில் சிங்களத்தின் ஆதிக்கம்!

தமிழர் கட்டமைப்பு சிதைப்புகளில் சிங்களத்தின் ஆதிக்கம்!

649
0

விழி புலன்களிற்கு விடைகாண முடியாத உறங்கு நிலை முகவர்களாக தம் தேச எஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக தமக்கெதிரான கருத்துடையோர்கள் ,அமைப்புக்கள் ஆகியவற்றினுள் ஊடுருவி, கண்டறிந்து நெருக்கடிகளின் பால் தம் சுய ஆதிக்க அதிகாரங்களை செலுத்தி  போலி செய்திகளை, புனைவு கதைகளை அவ் தனி நபர்கள், அமைப்புகள் மீது  கொணர்ந்து வீழ்ச்சியுற வைப்பதன் மூலம் பல கோணங்களில் சிதைவுற வைப்பதே புலனாய்வு அமைப்புகளின் மிக பிரதானமான செயற்திறனாக்கும்.

அந்த வகையில் இந்தியாவின் RAW ,மற்றும் CBI ,ரஸ்சியாவின் KGB ,அமெரிக்காவின் CIA, FBI,  இஸ்ரேலின் மொஸாட் , ஆகியவற்றின் நாசகார செயற் திட்டங்களை முன்னுதாரண  நடவடிக்கைகளாக இங்கு உற்று நோக்குவோம்.

இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளிற்கு எதிராக செயற்படும் அமைப்புகள் மீது ஊடுருவதும் , அண்டை நாடுகளின் அரசியல் தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்தி தமது அதிகார சக்தியை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சிகளை  RAW பல தடவைகள் முயற்சி மேற்கொண்டதை நாமறிவோம். இந்தியாவின் மாநிலங்களில்  நாகலாந்து, காஸ்மீர், வங்க தேசம், சத்திஷ்கர் போன்ற மாநில உரிமைக்காக  போராடிய மாவோயிற் போராளிகள் மீதும் ஊடுருவிய  RAW வின் முகவர்கள் அவர்களை அழித்தும், தற்போதும் அழித்து வருவதும் நாம் தினம் தினம் அறிந்து வரும் செய்திகளாகும்.

அதேவேளை ஆசியாவின் மிகப்பெரும் விடுதலை போராளிகள் அமைப்பினரான எம்மவர்கள் மீதும் இந்தியாவின்  RAW வினால் மேற்கொண்ட புலனாய்வு சிதைப்பு நடவடிக்கைகள் நாமறிந்ததே.

ரஷியாவின் தொழிற் சங்கங்களின் போராட்டங்களினால் அவதியுற்ற லெனின் அரசு தனது புலனாய்வு அமைப்பான  KGB யை பயன்படுத்தி தொழிற்சங்கங்களின் மீது தனது முகவர்களை ஊடுருவ செய்ததன் விளைவு அவ் தொழிற்சங்கங்கள் வலுவற்று சிதைவுற்றதையும் KGB முகவர்கள் அவ்  தொழிற்சங்கங்களை தம் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றி அரசு சார்பாக்கியதையும்  நினைவில் கொள்ளல் வேண்டும் .”ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள் அநேக ஆலோசனைகள் உண்டானால் சுகம் உண்டாகும் ” இதுவே யூதர்களின் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாட்டின் மொஸாட் புலனாய்வமைப்பின் குறிக்கோள் மந்திரமாகும் .  யூதர்களுக்கெதிராக செயற்பட்ட நபர்களை நாட்டிற்க்கு வெளியே கொல்லுதல் , சிறைபிடித்தல் என்பனவற்றை மொஸாட் கச்சிதமாக நிறைவேறிக்கொள்ளும் ஒரு புலனாய்வு அமைப்பு. 

ஆஜன்டினாவில் தலைமறைவாக நிகாடோ கிளைமென் எனும் பெயருடன் மெக்கானிக் வேலை பார்த்த ஒருவர் திடீரென மொஸாட் டினால் கடத்தப்பட்டார். யார் அந்த நிகாடோ கிளைமென். அவன் ஒரு நாசி ஹிட்லரின் வலது கரமாக செயற்பட்ட  ஈச்மன் எனும் பெயருடையவன்.  12 ஆண்டுகளாக மொஸாட் தேடி திரிந்து தகவல் சேகரித்து மறைமுகமாக இருந்த ஈச்மனை  ஆஜன்டினா அரசின் அனுமதி இன்றி  மொஸாட்டினால்  இஸ்ரேலிற்கு கடத்தப்பட்டான். இவன் செய்த குற்றம் தான் என்ன ??  ஹிட்லருடன் இணைந்து யூத மக்களை படுகொலை செய்வதற்கு துணைபோயிருந்தான் ஈச்மன். பிற நாடுகளில் மறைமுகமாக சர்வ சாதாரணமாக உலாவரும் மொஸாட்  முகவர்கள் தான் புலனாய்வின் முன்னோடிகளாக செயற்படுகின்றனர். அதே போன்று மொஸாட் மேற்கொண்ட ஆள்கடத்தல்கள், பிற நாடுகளில் தங்களுக்குகெதிரான அமைப்புகளை  சிதைத்தல் நடவடிக்கைகளை ஒத்ததாகவே சிங்கள பேரினவாத அரசும் தனது புலனாய்வு முகவர்களை புலம்பெயர் தேசமெங்கும் களமிறக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. 

சிறிலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பின் செயற்பாட்டின் அடிப்படை நோக்கம் அன்று தொட்டு இன்றுவரை சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சிக்கு தடையாக அல்லது எதிராக செயற்படுவோரை இனம் கண்டு இல்லாதொழிப்பது, தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை நசுக்கி முழுமையாக அழிப்பது, தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஒவ்வொரு தமிழனின் மனதிலிருந்தும் அகற்றுவதற்கான உளரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவது என்பதை இலக்காகக் கொண்டே செயற்பட்டது, செயற்பட்டுக் கொண்டும் வருகின்றது.

1985ம் ஆண்டு அரச தேசிய பாதுகாப்பு சபையின் NSC (Nationl Security Council) கீழ் முதல் தேசிய அமைப்பாக NIB (National Intelige nce Bureau) சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கமும் தமிழர் விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்ததை இலக்காகக் கொண்டது. ஆனால் இவ் NIB அமைப்பானது ஓரளவு வித்தியாசமான முறைகளைக் கையாண்டது. அதாவது தகவல் சேகரிப்பு, ஆய்வுத் தலைமைக்கு அனுப்புதல், மறைமுகச் செயற்பாட்டை மேற்கொள்ளுதல் என்ற படிமுறைகளைக் கையாண்டது. இதற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்ற அமைப்புக்கள், மற்றும் தனி நபர்கள் பற்றிய விடயங்களும் தகவல்களாக NIB ஆல் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு பின் இரகசிய மறைமுகச் செயற்பாட்டின் மூலம் அவ்வமைப்பை அல்லது அந்நபரை அல்லது அச்செயற்பாட்டை அழித்தது. 

கிளர்ச்சி முறியடிப்பு பிரிவு CSU (Counter Subvevsire Unit). பயங்கரவாத புலன் விசாரணைப் பிரிவு TID (Terrorst Investigation Division). விசேட புலனாய்வுப் பிரிவு UNITE SIU (Special Investigation Unit). விசேட பிரிவு SB (Speecial Branch) போதைப் பொருள் தடுப்புப் பணியகம் PNB (Police Narcotics Bureau) ஏமாற்று மோசடி விசாரணைப் பிரிவு FIB (Frauol Investion Bureau) குற்றக் கண்டுபிடிப்பு பணியகம் CDB (Crim ed Investire Bureau) என்பதோடு படைத்துறை தலைமையகத்தின் கீழ் பின்வரும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவு, கடற்படை புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிரிவு இவ்வாறாக தமிழ்த் தேசியத்தை அழிக்கும் இலக்கில் சிறிலங்கா புலனாய்வுக் கட்டமைப்பு பொலிஸ் நிர்வாகத்தின் கீழும், படைத்துறை தலைமையகத்தின் கீழும் பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. தற்போது உள்ளக புலனாய்வு பணியகம் DII (Derectorete of Internal Intellgence) வெளிநாட்டு புலனாய்வு பணியகம் DFI (Derea torete of Foreign Intelligence) என்றவாறு இரு கட்டமைப்புக்களாக விரிவாக்கப்பட்டது. 

இதில் DFI இன் வெளியக புலனாய்வு செயற்பாடுகளை எல்லா நாட்டிலும் உள்ள தூதுவராலயங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. DII இன் தலைமையகம் கொழும்பில் உள்ள கேம்பிறீச் பிளேசில் அமைந்துள்ளது. DFI இன் தலைமையகம் கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியா உயர் ஸ்தானிகாரியாலயத்திற்கு எதிரே பஸ் தரிப்பிடத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு புலனாய்வு பணியகம் DFI செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே புலம்பெயர் மண்ணில் ஏற்படுகின்ற தமிழ் அமைப்புகள்,செயற்பாட்டாளர்கள்  மீதான போலி செய்திகள் மற்றும் நேரடியான கொலை அச்சுறுத்தல்கள், ஊடகங்கள் வாயிலாக மக்களை இலகுவில் சென்றடைய கூடிய வகையிலான காழ்புணர்ச்சி உரையாடல்கள், பிரான்ஸ் மண்ணில் முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டமை, மலேசியா மண்ணிலிருந்து போராளிகள் இனம் காணப்பட்டு கைதின் பின் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டமை எம் தேசிய செயற்பாட்டாளர்களை மனம்மாற்றி தமிழ் தேசியத்திற்கு கெதிராக செயற்பட வைத்தமை, முன்னாள் மூத்த போராளிகள் என்பவர்களிற்கு ஆசை வார்த்தைகளையும், வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி அவர்களை  நாட்டிற்க்கு அழைத்து சென்றமை என்பன வற்றை குறிப்பிடலாம். 

தமிழீழ தேசிய தலைவரின் 2008 மாவீரர் நாள் நினைவுரையின் பால் உருவாக்கம் பெற்று புலம் பெயர் தமிழர்களால்  கையேற்கப்பட்டதே தமிழீழ கனவாகும் . தாயகத்தில்   தமிழீழ கனவை அழித்து விட்டதாக தம்முள் கனவு கொண்ட இலங்கை அரசு  புலம் பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் ஈழ கனவோடு வீரியம் கொண்டு பல முனைப் போராட்டங்கள் வளர்வதை கண்டு அச்சம் கொண்டது. இதனால் ஏற்கனவே செயற்பட்டு கொண்டிருந்த தமிழ் அமைப்புகள், புதிய அமைப்புகள் என்பனவற்றினை இலக்கு வைத்து சிதைக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்தது  வெளிநாட்டு புலனாய்வு பணியகம் (DFI). இதன் விளைவாக பல அமைப்புகள் சிதைவுற அதிலிருந்து வீரியமுள்ள விதையாக 2010 மே 18 ஆரம்பித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசுக்கெதிரான தனது இராஜ தந்திர செயற்பாடுகளை முன்னகர்த்தி இன்றும் சர்வதேச அளவில் சிறீலங்கா அரசிற்கு பாரிய அழுத்தங்களையும், கட்டுப்பாடுகளை விதிக்குமளவிற்கும் பெரும் தலைவலியாக, தொண்டையில் சிக்கிய முள்ளாக குத்தியவணமே உள்ளது.

அதுமட்டுமன்றி தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பல கட்டமைப்புக்களை உருவாக்கி ஓர் தேசமாக அக்கடாமைப்புக்களூடாக நிர்வாகம் நடாத்தி வந்தார்களோ அதே போல் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வாழும் நாடுகளில் நாடுகடந்த தமிழிழ அரசாங்கமும் அவ் அவ் நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பல வேலைத் திட்டங்களையும் அறிமுகம் செய்தது.

குறிப்பாக மே 18, 2011 இல் தமிழீழ தேசிய துக்க நாளாக “மே18” பிரகடனம் செய்தது. மே 18, 2012 இல் தமிழீழ தேசிய அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. 2013 டிசெம்பர் 14 இல் தமிழர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை (International Protection Mechanism) மே 18, 2013 இல் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு, மே 17 2014 இல் சிறிலங்காவை புறக்கணிப்பு (SAY NO TO SRI LANKA) செயல்முனைப்பு, மே 18, 2014 இல் சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள் பட்டியல் வெளியீடு, யூலை 15, 2014 இல் சாட்சியங்களை திரட்டுதலும் ஆவணப்படுத்தலும் (Evidence Collection Project), மே 18, 2015 இல் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை (Mullivaikal Memorial Lecture), மார்ச்15 2015 இல் மில்லியன் கையெழுத்துப் போராட்டம், (www.tgte-icc.org) செப்ரெம்பர் 1 2015 இல்  சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் குழு (Monitoring Accountability Panel [MAP] ), (http://war-victims-map.org/) மே 18, 2016 இல் ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று ஒக்ரோபர்  2017 இல் சீனாவின் 99ஆண்டு அம்பாந்தோட்ட குத்தகை தொடர்பான அனைத்துலகச் சட்டம், இறைமை நிலைப்பாடுகள் தொடர்பில் ஆய்வறிக்கை புறுக்சல்சில் உள்ள கடல்சார் சட்ட நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது, டிசம்பர் 8, 2017 இல் சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப்போராட்டம், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பெரும் பணித்திட்டம் (Nation  Building – Massive Action Plan), Continuous attendance in UN HRC sessions /international lobbying ஐ.நாவை நோக்கிய உள்யேயும் வெளியேயுமான தொடர் செயற்பாடுகள், மே 18 2018 இல்  You are not forgotten” / உங்களை நாங்கள் மறவோம். ஜனவரி 1 2018 இல் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் (Yes to Referendum), தமிழ் ம‌ரபுத் திங்கள் – பொங்கல் விழா, சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துமாறு பிரித்தானியா நோக்கிய மனு, என பலதரப்பட்ட செயல்திட்டங்களை முன்னகர்த்தி அதன்பால் நீதிக்கும், இறைமைக்கும் பல் முனை செயற்பாடுகளை பல நாடுகளில் ஒன்றிணைனந்த முயற்சிகளின் பலனாக உலக அரங்கு நோக்கி நகர்த்தும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விரிவாக்கம் பெற்றது. ஆரம்பிக்க பட்ட காலத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தல் காலத்தை நெருங்கிய ஒரு வலுவானதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகவும் காணப்படுகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் கடந்த காலங்களில் செயற்பட்டவர்களில் கணிசமானவர்கள் செயற்திறனற்றவர்களாகவும், மக்கள் மத்தியில் வெறுக்கப்பட்ட அல்லது விமர்சிக்கப்பட்ட தீய பழக்கவழக்கங்கள் உடையவர்களாகவும், சில நாடுகளில் தேர்தலின்றி உள்ளக அரசியலூடாக தந்திரமாக உள் நகர்த்தி மக்கள் பிரதி நிதிகளாக்கப்பட்டதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கள் 10 ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் ஆழ வேரூன்றாததற்கான காரணங்களாக அமைந்திருப்பது மறுப்பதற்கில்லை.

இருந்த போதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அதன் நோக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான மிக முக்கியமானதும், தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருப்பதை மறந்துவிடமுடியாது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் சமாதான காலப்பகுதியில் தாயகத்தில் வைத்து தன்னருகே இருத்தி அடையாளம் காட்டியதோடு, தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச சட்டவாளர் என அடையாளப்படுத்தப்பட்டவரே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறுவனரும், பிரதமருமான திரு.வி.ருத்திரகுமாரன் அவர்கள். அவர்மீதான பல விமர்சனங்கள் இருந்தாலும் அதைக் கடந்து தான் கொண்ட இலட்சியத்திற்காக தனது முழுமையான வழங்களையும் திரட்டி அனுபவ முதிர்ச்சியோடு கல்விமான்கள், அறிவு ஜீவிகள், மனித நேய செயற்பாட்டாளர்களை இனம் கண்டு தமிழர் அல்லாத பல்துறைசார் வேற்று நாட்டவர்களையும், இராஜதந்திரிகளையும் உள்ளடக்கி நேர்த்தியா தமது பணியை சர்வதேச அரங்கில் செயற்படுத்தியதன் விளைவே இன்று சிறீலங்கா அரசிற்கு நேர் எதிரியாகவும், முதன்மை எதிரியாகவும் நாடுகடந்த தமிழிழ அரசாங்கம் திகழ காரணம் எனலாம்.

இது போன்று சிங்கள ஏகாதிபத்தியத்தின் இடையூறுகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்களிலுள்ள ஏனைய தமிழமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் தனி மனித இன்ப, துன்பங்களுக்கு அப்பால் தம் குடும்பங்களின் நலன்களை துறந்து தத்தமது பொருளாதார வளங்களையும் ,பெறுமதியான நேரங்களையும் வழங்கி இனம் ,விடுதலை ஒன்றே மூச்சாக செயற்பட்ட, செயற்பட இருக்கும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்களே. 

கடந்து வந்த பாதைகளில் சில நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மக்களை விசனப்படுத்தியதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டிய தேவை உண்டு. 

1) தம்மை தமிழ் தேசிய பற்றாளர்களாகவும் ,பல அமைப்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையானவர்கள் எனும் மாயையை ஏற்படுத்தி எம் விடுதலைக்கெதிரான கைங்கரியங்களில் ஈடுபட்டத்தையும் மறக்க முடியாது .தங்கை இசைப்பிரியாவின் திரைப்படம் ஒன்றை வெளியீடு செய்வதற்கும், இசைப்பிரியாவின் குடுப்பத்திற்கு எதிராக செயற்பட்ட அதன்பால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் பொறுப்பாக சில நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அமைந்தது மனவருத்தத்திற்குரியவை ஆகின.
அத்தோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கதிற்கு மக்களினால் வழங்கப்பட்ட நன்கொடை பணத்தினை சுமார் (£35.000 பணத்தினை) நாடுகடந்த தமிழீழ அரசாங்க நிதி அமைச்சுக்கு வழங்காது , அல்லது தாயக மக்களின் வாழ்வுக்கு பயன்படுத்தாது தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்துள்ளதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

2) புலம் பெயர் மக்களினால் வழங்க பட்டுவரும் நன்கொடைகளிற்கு பற்றுசீட்டு வழங்காது அப்பணத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்க நிதி அமைச்சுக்கு வழங்காதும் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் வைத்துள்ளதையும் இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.

3) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு அமைச்சினால் ஒழுங்கு படுத்தப்படும் விளையாட்டு போட்டிக்கான கணக்காய்வுகள் இதுவரைக்கும் பொது அரங்கிற்கு கொண்டுவர படாமல் மூடி மறைக்கப்படுகிறது. 

4)நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் சிலர்  சிறிலங்காவின் வெளிநாட்டு புலனாய்வு பணியகம் DFI யின் ஆளுகைக்குள் உள்வாங்க பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் விதமாக இரு தடவைகளிற்கு மேலாக  நாடுகடந்த தமிழீழ அரசாங்கதினை பிளவு படுத்த எடுத்த முயற்சியினையும் குறிப்பிடலாம். 

5) எமது தாயக விடுதலை நோக்கில் பல இடையூறுகளை ஏற்படுத்தி இப்போதும் கூட தமிழீழ கனவை சிதைக்கின்ற செயற்பாடுகளில் சகோதரன் ஒருபுறம்  முன்னோக்கி நகர அண்ணனான நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதியோ நாடுகடந்த தமிழீழ அரசாங்க உதவி அமைச்சராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கதினை பிளவு படுத்த எடுத்த முயற்சிகளையும் காணலாம் .

6)ஆரோக்கியமான கருத்தாடல்களின் போது கேள்வி கேட்பவர்களை விரோதிகளாக பார்ப்பதும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதும் கண்கூடு. இது இன விடுதலையை நோக்கி செயற்படும் அமைப்பிற்கு அழகல்ல . 

புலம் பெயர் மண்ணில் தம்மை தமிழ் தேசிய வாதிகளாகவும், பற்றாளர்களாகவும், பிரதிநிதிகளாகவும், வன்னி மண்ணின் ,ஈழத்தின் பெயர்களை சுமந்து கொண்டு முகநூல்களிலும், உரையாடல்களிலும், முரசறைபவர்களின் முகமூடிகளை இனம் காணுதல் அவசியம்.

அந்த வகையில் பிரதிநிதிகளின் பின்புலங்களை நன்கு அறிந்து தமிழ் தேசியத்திற்கான நற் செயற்பாட்டாளர்களை தெரிவு செய்வதனுடாக எம் இலக்கான தமிழீழ விடியல் சாத்தியமாகும்.  புலம் பெயர் மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திணை வலுப்படுத்தும் முகமாக ஏப்ரல் 27 அன்று நடைபெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலினை எதிர் கொள்ளல் வேண்டும்.

இம்முறையும் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்தும் இதுவரை தேர்தல் ஆணையகத்தால் முழுமையான விபரங்கள் வெளிப்படையாக இன்னமும் வெளியிடப்படவில்லை. ஊடகங்களின் தொடர்பினையும் தட்டிக்கழிப்பது இம்முறையும் தவறுகள் நடைபெற உள்ளதென்பதையே சுட்டிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக தபால் மூல வாக்குப்பதிவிற்கு அக்கறை செலுத்தும் தேர்தல் ஆணையம் அது எந்த என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது, வாக்களிப்பு நிலையங்கள் எத்தனை..? அவை எங்கு என்பதைக் கூட இன்னமும் அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. பல நாடுகளில் வாக்காளர் பதிவில் உள்ள விபரங்களை வைத்தே தபால் மூல வாக்குப்பதிவு அட்டைகள் அனுப்பப்படுகிறது. ஆனால் இங்கு நடப்பதோ வேறு. பல வேலைதிட்டங்களுக்காக மக்களிடம் பெறப்பட்ட பெயர் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வீட்டு முகவரி ஆகியவற்றை தவறான முறையில் தபால் மூல வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதாகவும் அறியவந்துள்ளது. கடந்த முறை தேர்தலின் போது (இரண்டாம் பாராளுமன்றிற்கான) வேட்பாளர்கள் சொந்தப் பெயர்கள் இன்றி அவர்களால் கொடுக்கப்பட்ட போலிப் பெயர்களையே தேர்தல் ஆணையகம் தெரிவி செய்யப்பட்ட பிரதி நிதிகள் விபரப் பட்டியலில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் முறையேனும் கடவுச் சீட்டுக்கள், அல்லது குறித்த நபரின் வதிவிட அனுமதியை உறுதிப்படுத்தி அந்தந்த நாட்டு அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை யேனும் வேட்பாளர்களிடம் பெற்று மக்களின் பிரதிநிதிகளை பொய்யற்றவர்களாக அடையாளப்படுத்தவேனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகம் முன்வரவேண்டும். அத்தோடு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இனம் கண்டு அம் மக்கள் தொகைக்கேற்ப வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அமைய வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்துவிட்டு மக்கள் வாக்களிக்கவில்லை எனக்கூறி தப்பிக்க முனையக் கூடாது.

ஆகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இம்முறை தேர்தலில் முறைகேடுகள் ஏற்படாதவாறும், பிரதிநிதிகள் தேர்வில் வெளிப்படையான நம்பகத்தன்மை ஏற்பட கூடியவாறும், தேர்தல் முறைமை வெளிப்படையான வாக்கு எண்ணிக்கை வேட்ப்பாளர் விபர அறிவிப்பு தபால் மூல வாக்கு விதிமுறை வெளிப்படுத்தல், வாக்கு சாவடி விபரங்களை முன்னரே வெளிப்படையாக அறிவித்தல், வாக்கு சாவடிகளிற்கு மக்கள் செல்வதற்கான வசதிகளை ஏற்படுதல் அவசியமாகிறது. 

இம்முறையும் தேர்தலில் முறைகேடுகள் நிகழுமானால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையீனங்கள் அதிகரித்து மக்களின் ஆதரவு குறைந்து வலுவிழந்து காணாமல் போகும் அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இக்கட்டான துர்ப்பாக்கிய நிலைக்கு  தள்ளப்படும்.

“தமிழ் தேசிய இன விடுதலையின் உருவாக்கம் என்பது புலம்பெயர் மண்ணிலிருந்தே வியாபிக்கும் என்பதே திண்ணம். தாயக மண்ணில் சிங்கள மேலாதிக்கத்தின் வன்கொடுமைகளிலிருந்து தமிழ் தேசிய இனத்தை காப்பதற்கான கருத்தியல் உருவாக்கம் என்பதும் புலம்பெயர் தமிழ்த்தேசிய பற்றாளர்களின் தார்மீக  கடமை என கொள்க”

-சிவநேசன்.செ-