
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை மீட்க தொடர்ந்தும் போராடுவேன் என ஆண்டுகளின் பின் விடுதலையான ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார்.
2014 இல் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதவியா நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுவித்துள்ளது.
விடுதலையாகி வந்த பின்னரே ஜெயக்குமார் மேற்படி தகவலை வெளியிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்
“எனது இரண்டு மகன்களை இறுதி யுத்தத்தில் இழந்தேன். காணாமல் வலிந்து ஆக்கப்பட்ட எனது மூன்றாவது மகனைக் காணவில்லை என்று தேடிய என்னை காரணம் கூறாது கைது செய்தார்கள், பின்னர் ஒரு காரணத்தைக் கூறி சிறையில் அடைத்தார்கள், மிகவும் சிரமப்பட்டுப் பிணையில் விடுதலை யானேன். அதன்பின்னரும் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என அலைந்தேன். மகனைத் தேடிய எந்தத் தாய்க்கும் இவ்வாறு நடக்ககூடாது. இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளேன். எனது மகனை மீட்க நான் தொடர்ந்தும் போராடத்தான் போகி றேன். மகன் எனக்கு வேண்டும். என்ன நடந்தாலும் நான் போராடுவேன்.” என்றார்.
பிரிட்டனின் முன்னாள் தலைமை அமைச்சர், டேவிட் கமருன், ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிளை போன்றவர்கள் இலங்கைக்கு வருகை தந்தபோதெல்லாம் ஜெயக்குமாரி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். போரின்போதும் அதன் பின்னரும் நடந்த சம்பவங்களை அவர் அந்த அதிகாரிகளிடத்திலே தெட்டத்தெளிவாகக் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் புலிகளை மீளுருவாக்கம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 2014 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருடன் சேர்த்து அவரது ஒரே ஒரு மகளான விபூசிகாவும் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மற்றும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஆயினும் விபூசிகா சில தினங்களில் கிளிநொச்சி நீதி வான் நீதிமன்றத்தால் கிளிநொச்சி சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.