Home தமிழகச் செய்திகள் தலைவர் பிரபாகரனின் புரட்சி மொழிக்கேற்ப நாம் களம் இறங்கியிருக்கிறோம்: சீமான்

தலைவர் பிரபாகரனின் புரட்சி மொழிக்கேற்ப நாம் களம் இறங்கியிருக்கிறோம்: சீமான்

245
0

‘பாதையை தேடாதே பாதையை உருவாக்கு’ என்பதை கற்பித்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புரட்சி மொழிக்கேற்ப குறுகிய பாதையை வகுத்து வந்து நிற்கின்றோமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஒசூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வியர்வை சிந்தி உழைத்தாலும் இலவசமாக அரிசி வழங்கினால் தான் தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியுமென்ற வறுமை சூழ்நிலையை உருவாக்கியவர்கள் யாரென்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பிரபாகரனின் புரட்சி மொழியை பின்பற்றியே எமது கட்சி இயங்குகின்றது. புரட்சி என்பது ஒரு தலைகீழ் மாற்றமாகும். இந்த புரட்சியின் ஊடாக இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பாதாளத்தில் விரைவில் தூக்கி வீசப்பட்டு, துன்பத்திலுள்ள இளைஞர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறான உயர்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டே நாம் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கல்வி, பொருளாதாரம், வைத்தியம் ஆகியவற்றில் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்தியாவை ஊழல், கொலை மற்றும் கொள்ளையற்ற நாடாக மாற்றிவிட முடியாதா என்ற எண்ணத்திலுள்ள இளைய தலைமுறையினரை நம்பியே நாம் உள்ளோம்.

ஏனைய கட்சிகள் தங்களது வாக்குகளுக்காக பணத்தை கொடுக்கின்றார்கள். ஆனால் நாம் சிறந்த கருத்துக்களை மக்களுக்காக வழங்குகின்றோம். ஆகையால், இவ்விடயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் செயலாற்ற வேண்டும்” என சீமான் தெரிவித்துள்ளார்.