Home செய்திகள் எல்லோருமே வெளிநாடு சென்றால் வடகிழக்கு மாகாண மக்களின் இருப்பு பாதிக்கும்!

எல்லோருமே வெளிநாடு சென்றால் வடகிழக்கு மாகாண மக்களின் இருப்பு பாதிக்கும்!

246
0

தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் வெளியான கருத்து குறித்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன், வருத்தமும் தெரிவித்துள்ளதோடு, தனது விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நான் மட்டக்களப்பு செல்லமுன் அவசர அவசரமாகக் கொடுத்த, தினகரன் செய்தித் தாளில் வெளியான செவ்வியில் இளைஞர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான எனது பதில் அல்லது சொல்லாடல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

உண்மையில் அதில் அடங்கிய கேள்விக்குப் பதிலாக நான் எண்ணிய அல்லது சொல்ல விழைந்த கருத்து
1. தொழில் தகைமைகள் அற்றவர்கள் வெளிநாடு செல்வதை விடுத்து இங்கிருந்து தேவையான தகைமைகளைப் பெற்று வளமாக வாழமுடியும்.

2. போர் முடிந்த பின்னரும் எல்லோருமே இப்படி வெளிநாடு செல்வதால் எதிர்காலத்தில் எம்மக்களின் வடகிழக்கு மாகாண இருப்புக்கு பாதிப்பு ஏற்படும்.

3. இந்த வெளிநாட்டு மோகம் எமது கல்வியைப் பாதிப்படையச் செய்துவிடும் என்பது மட்டுமே.
போர்க்காலத்திலும் அதன் பின்னரும் வெளிநாட்டிலுள்ள எமது உறவுகளால் இங்கிருக்கும் எம்மக்களின் வாழ்க்கை வளமாயிற்று என்பதுடன் நெருக்கடியான காலத்தில் அவர்களாலேயே எம்மண்ணும் மக்களும் நிமிர்ந்து நின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்.

இவ்வாறு தமது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் உதவும் அவர்களையோ அல்லது அவர்கள் செய்யும் எந்தத் தொழிலையோ இழிவு படுத்தும் எண்ணம் என்னிடம் எள்ளளவும் இருந்ததில்லை. எமது இளைஞர்கள் போர் முடிந்த பின்னரும் வெளிநாடு நோக்கிச் சென்றால் யாருக்காக நாங்கள் அரசியல்ப் போராட்டங்களை எடுத்துச் செல்கின்றோம் என்ற எண்ண மேலீட்டினால் வந்ததே எனது பதில். எனது கருத்து அல்லது சொல்லாடல் மூலம் யாருக்கேனும் மனவுளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்காக மனம்வருந்துகின்றேன்.