Home செய்திகள் ஆளுனர் சுரேனின் கூற்றை நிராகரித்து, கவலை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஆளுனர் சுரேனின் கூற்றை நிராகரித்து, கவலை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

201
0

கடந்த மார்ச் 20 ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைப் பேரவையில் பங்கேற்க வந்திருந்த இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவொன்றுடன் தான் அன்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலக அறிக்கை தொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடலை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் செவ்வாயக் கிழமையன்று பத்திரிகை ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில் தவறான விதத்தில் எடுத்துரைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர் ஸ்தானிகர் மிஷல் பேஷிலேட் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில நாளேட்டில் திங்கற்கிழமை வெளியான ஒரு செய்தியில் , இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவின் ஒரு அங்கத்தவராக ஜெனீவாவில் பங்கேற்ற வட மாகாண ஆளுனரான கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவிக்கையில் ‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது’ என ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதன் பிறகு ‘அதிக பொறுப்புணரச்சி மற்றும் எச்சரிக்கையுடன்’ செயல்படுமாறு ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் ஆளுனர் ராகவன் கூறியதாக டெய்லி மிரர் பத்திரிகையின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வட மாகாண ஆளுனரின் மேற்படி கூற்றுக்களை முற்றாக மறுக்கும் ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகர் பேஷிலேட் , ‘இந்த இரு கருத்துக்களில் எதுவும் உண்மையானதல்ல’ என வலியுறுத்தியுள்ளார். ‘ஒன்றில், ஆளுனர் கூறியதை (டெய்லி மிரர்) பத்திரிகை தவறாக புரிந்திருக்க வேண்டும். அல்லது நான் கூறியதை ஆளுனர் தவறாக விளங்கியிருக்க வேண்டும் -அல்லது தவறாக என்னை மேற்கோள் காட்டியிருக்க – வேண்டும்’ என உயர் ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் திருமதி பேஷிலேட், மனித உரிமை பேரவைக்கு தான் சமர்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் தான் ஸ்திரமாக இருப்பதாகவும், அக்கூற்றுக்கள் இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிப்பதாக தான் நம்புவதமாகவும் கூறினார்.