
மன்னார் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்பை பயன்படுத்தி, பல அரசியல்வாதிகள் இச்சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, மக்களைத் தூண்டி வரும் விதத்தில் செயற்படுவதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் கோவில் அலங்கார வளைவு சேதம் தொடர்பாக, அவர், இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது, ஏற்கனவே திட்டமிட்டோ அல்லது கத்தோலிக்க குருக்களின் உந்துதலாலோ நடை பெறவில்லையெனவும் குறிப்பிட்ட அவர் திருக்கேதீஸ்வரம் ஆலய அலங்கார வளைவு சேதமாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கத்தோலிக்க குருக்கள் யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையே மதப் பிரச்சனையை தூண்டி பிளவை ஏற்படுத்த ஏதோ ஒரு சக்தி பின் நின்று இச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெட்டத்தெளிவாக தெரிந்தாலும், கத்தோலிக்க குருக்கள் யாரும் அந்த சம்பவ இடத்தில் இருக்கவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கூறியுள்ளமை எந்த அடிப்படையில் என புரியவில்லை.
ஏனெனில், சம்பவ இடத்தில் கிறிஸ்தவ போதகர் (குரு) ஒருவர் இருந்த புகைப்படம் பல செய்தி சேவைகளிலும், சமூக வலைத் தளங்களிலும் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


