Home முக்கிய செய்திகள் தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும்: எச்சரித்த மிச்சேல் பசெலெட்

தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும்: எச்சரித்த மிச்சேல் பசெலெட்

283
0
U.N. High Commissioner for Human Rights Chilean Michelle Bachelet addresses her statement during the opening of 39th session of the Human Rights Council, at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Monday, Sept. 10, 2018. (Salvatore Di Nolfi/Keystone via AP)

போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற ஆபத்து தொடர்கின்றமையானது, சமூக மற்றும் இனத்துவ வன்முறைகளையும், உறுதியற்ற நிலையையும் தூண்டுகிறது.

இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதும், கடந்தகால குற்றங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதும், பாதிக்கப்பட்ட எல்லா சமூகத்தினரதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமானது.

குறிப்பிட்ட காலவரம்புக்குள்,  சிறிலங்கா அரசாங்கம், விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறைகளுக்கான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

சுதந்திரமான, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டம், முக்கியமான அடுத்த கட்டமாக இருக்கக் கூடும்.

சிறிலங்கா அரசின் உயர் மட்டத் தலைமையின், தூரநோக்கின்மையால், போர்க்கால அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறும்,  தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா தவறி விட்டது.

ஐ.நாவுடன் கொழும்பு ஒத்துழைத்த போதும்,2010 பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை மிக மெதுவாகத் தான் நடைமுறைப்படுத்துகிறது.

2015இல் ஆட்சிக்கு வந்த சிறிலங்காவின் புதிய அரசாங்கம், போர்க்குற்றவாளிகளை விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும், அனைத்துலக – ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிப் பொறிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால், இரண்டு தரப்பிலும் பத்தாயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டதற்கு நீதியை உறுதிப்படுத்தவதற்கான எந்த பொறிமுறையையும் கொழும்பு இன்னமும் உருவாக்கவில்லை.

30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுதல் இன்னும் சீரான, விரிவான முறையில் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை கடுமையாக மீறியவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டிருப்பது, கவலையளிக்கும் ஒரு நிலைமையாகும்.

மனித உரிமைகள் விடயத்தில் கேள்விக்குரிய படை அதிகாரிகளை நீக்குவதற்கு, ஆய்வுச் செயல்முறைகளை உள்ளடக்கிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். 43 ஆண்டுகளுக்குப் பின்னர், மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் சிறிலங்கா அதிபரின்  அறிவிப்பு கவலை அளிக்கிறது.

அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும்  தைரியமான முடிவு மற்றும்  தலைமைத்துவத்தின் மூலம், கடந்தகால வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.