Home செய்திகள் தமிழினப் பற்றாளர் வரதகுமாருக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் இரங்கல்:

தமிழினப் பற்றாளர் வரதகுமாருக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் இரங்கல்:

231
0

கடந்த 13.03.2019 அன்று பிரித்தானியாவிலே உடல் நலக்குறைவால் காலமான சிறந்த சமூக சேவையாளரும், தமிழினப் பற்றாளருமான திரு. வைரவமூர்த்தி வரதகுமார் அவர்களின் பிரிவு ஆழ்ந்த கவலை அளித்துள்ளதாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அவ் அமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் இரங்கல் அறிக்கையின் முழுமையான விபரம் பின் வருமாறு;

சிறந்த சமூக சேவையாளரும், தமிழினப் பற்றாளருமான திரு. வைரவமூர்த்தி வரதகுமார் அவர்கள் கடந்த 13.03.2019 அன்று பிரித்தானியாவிலே உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து “சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்” ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

1979 இல் “தமிழ் தகவல் மையம்” ஆரம்பிக்கப்பட்ட போது அதன் நிறுவனர்களில் ஒருவராக செயலாற்றத் தொடங்கிய நாள் முதல் தனது வாழ் நாளின் இறுதி நாள் வரை ஓய்வின்றி தமிழர்களின் நலனுக்காகவும், மனித உரிமை விடையங்களுக்காகவும், ஓய்வின்றி உழைத்த உன்னத ஜீவன் திரு.வை.வரதகுமார்.

குறிப்பாக தமிழ் சார்ந்த, தமிழர் சார்ந்த ஆவணச் சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்து பாதுகாத்து வந்தவர். வெளியிலே தேடி எடுக்க முடியாத பல அரிய ஆவணங்கள் இவரிடம் உள்ளமை எமக்கு வியப்பையே தந்திருந்தது.

தன்னலமற்று பொது நலத்தோடு எந்தப் பணியையும் செய்யும் இவர் முரண்பாடுகளுக்கு அப்பால் இன்முகத்தோடு அனைவரோடும் பழகும் பண்பும், தன்னை நாடிவரும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையானவற்றை இயன்றவரை உதவி செய்து அவர்களின் வாழ்வில் ஒளியூட்டியதும் இவரின் வாழ்விற்கு அர்த்தம் கூறும் சிறப்புக்களாகும்.

இவ்வாறான ஓர் அற்புத மனிதனை இன்று இழந்து நிற்கிறது தமிழ் சமூகம். இந்த வேளையில் இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவரின் துயரிலும் நாமும் பங்கு கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்

http://www.thamilnaatham.media/wp-content/uploads/2019/03/iataj_pr_Varathakumar.pdf