Home தாயக செய்திகள் கிளி நொச்சியில் – பணிப் புறக்கணிப்பில் ஆசிரியர்கள்!

கிளி நொச்சியில் – பணிப் புறக்கணிப்பில் ஆசிரியர்கள்!

226
0

இலங்கையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று (13) ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர் சங்கத்தின் அழைப்பிற்கு இணங்க கிளிநொச்சியிலும் அனைத்து பாடசாலைகளிலும் அரை மணி நேர பணி புறக்கணிப்பை மட்டும் ஆசிரியர்கள் இன்று மேற்கொண்டனர்.

இது தொடர்பில் ஆசிரியர் ஒருவர் தமிழ் நாதம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்த கர்த்தால், பாடசாலை விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டும், மணவர்களின் கல்வி, பரீட்சைகளை கருத்தில்கொண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களான நாம் போராட்டத்தை அரை மணிநேரமாக மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

அது மட்டுமன்றி இன்று ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு தினம் என அறிந்தும் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர். ஆகவே அவர்களின் நேரத்தையும், ஆர்வத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

இலங்கையில் ஆசிரியர் பணி என்பது முன்பு போல் இப்போது இல்லை. பலதரப்பட்ட சிக்கல்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பணிச்சுமை அதிகம். தொழில்னுட்ப வசதிகள் மிக மிக குறைவு. வெளிநாடுகளைப் போல் அல்லாது கற்பிக்கும் செயற்பாடு பிந்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒழுங்கான சம்பளக் கொடுப்பனவுகள் இல்லை. கட்டுப்பாடுகள் அதிகம். ஆசிரியர்கள் வாழும் சூழல், வசதி நிலைகளை கருத்தில் கொள்ளாது கட்டாய இடமாற்றம். ஒழுங்கான சம்பள கொடுப்பனவு இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆசிரியர்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

முன்பெல்லாம் மாணவர்கள் பாடசாலைகளிலேயே ஒழுக்கம், நாகரீகம்,வாழ்க்கை முறை என்பவற்றை கற்று சிறந்த மனிதர்களாக வளர்ந்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதற்கு காரணம் மாணவர்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு போதிய அதிகாரம் இருப்பதில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. இதே வேளை ஒரு சில ஆசிரியர்களின் கீழ் தரமான செயல்களால் ஆசிரியர்களுக்கு அவப் பெயர் ஏற்பட்டிருப்பதும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான செயலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இவ்வாறான பல காரணங்கள், மன உளைச்சல் காரணமாக இலங்கையில் ஆசிரியர் துறையிலிருந்து பலரும் விலகி வேறு வேலைகளை நோக்கி செல்கின்றனர். இவ்வாறன நிலை மாற்றப்பட்டு சீரான கல்வி செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியே தாம் இப் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளதாக கூறினார்.