Home செய்திகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு உயரிய விருதுகள்!

212
0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் மாண்பேற்றும் வகையில் ஆளுமைகளுக்கு வழங்கப்படுகின்ற உயரிய நான்கு விருதுகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1. தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது

2. மாமனிதர், துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருது.

3. அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது.

4. தமிழ்த் தேசிய இளம் அறிஞர் புலமைப்பரிசில்

ஆகிய நான்கு விருத்துக்குரிய ஆளுமைகள் கொண்ட உரிய பரிந்துரைகளும், விண்ணப்பங்களும் உலகளாவிய நிலையில் தமிழ் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இவற்றுக்கு பொருத்தமான தனிநபரையோ அல்லது அமைப்பினையோ பரிந்துரை செய்யலாம் என அழைக்கப்பட்டுள்ளது.

குறித்த awards@tgte.org இந்த மின்னஞ்சல் வழியே இதனைத் தெரிவித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விருதுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரினால் நியமிக்கப்பட்ட வளப்பெருமக்களால் பரிசீலிக்கப்பட்டு, விருத்துக்குரியவர்கள் பரிந்துரைக்கப்படுவர்.

விருதுகள் பற்றிய விபரம் :

1. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு விருது

தமிழ் தேசியத்தின் தந்தை என்ற பொருள்பட ‘தந்தை’ செல்வா என தமிழீழ மக்களால் அழைக்கப்பட்டு வரும் அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் அரசியல் வரலாறு, தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காக அவரது வீரம் செறிந்த அர்ப்பணிப்பு மற்றும் அகிம்சை வழியில் தமிழர் தாயத்தில் சுயாட்சியுடனான தமிழரசு அமைய பாடுபட்ட அவரது தூரநோக்கு என்பவற்றை நினைவுறுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.

இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ தீவிர அரசியல் ஈடுபாட்டுடனான பங்கேற்பு முதன்மையான ஆய்வு நெறியாள்கை ஆய்வுக் கட்டுரை வழங்கல்கள்; சர்வதேச மன்றுகள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், ராஜதந்திரிகள் போன்றவைக்கு அடிப்படை உரிமைகள், தன்னாட்சி, சுயாட்சி போன்ற விடயங்களில் உறுதியான ஆலோசனை தரும் வல்லமை கொண்டிருக்கும் தனிநபருக்கு அல்லது அமைப்பிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

2. மாமனிதர், துணைவேந்தர் அழகையா துரைராஜா நினைவு விருது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவரும், விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெரும் புலமை கொண்டிருந்தவரும், 1994ம் ஆண்டு தேசியத் தலைவரால் ‘மாமனிதர்’ பட்டம் வழங்கப்பட்டவருமான பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள் சுயாட்சி, நாட்டுருவாக்கம் ஆகியன ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்ற கருத்து நிலையை உறுதிப்படுத்தப் பாடுபட்டவராவர்.

பேராசிரியர் அழகையா துரைராஜா நினைவு விருதானது தமிழ் மக்கள் செறிந்து வாழும் புலம் பெயர் நாடுகளில் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அளப்பரிய தகுதி வாய்ந்த பங்களிப்புகனை நல்கி, புத்தாக்க அணுகுமுறையுடன் கூடிய ஆய்வுகள், கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றுடன் விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், வர்த்தகம், தொழில்துறை, நீதிபரிபாலனம் ஆகிய துறைகளில் அறிவாக்கமும், அறிவுப் பரிமாற்றமும் தரும் வல்லமை கொண்ட தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படடுகிறது.

3. அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது. அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது உலகளாவிய நிலையில் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பாடுபடுவதுடன், போரால் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், நாடற்றவர்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிப்படைந்தவர்கள், இன, தேசிய ரீதியாக சிறுபான்மையினர் ஆகியோருக்காகப் பணியாற்றிவரும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

4. தமிழ்த் தேசிய இளம் அறிஞர் புலமைப்பரிசில் இப் புலமைப்பரிசிலுக்கு 18 வயதிலிருந்து 30 வயது வரையானோர் விண்ணப்பிக்க முடியும். விருதுக்கான ரொக்கத் தொகை 3000 அமெரிக்க டொலர்களாகும். இப்புலமைப் பரிசு பெறத் தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ் பேசும் இளைஞராகவும் மனித உரிமை, பொருளாதார, சமூக நீதி நெறிகளை கைக்கொண்டு இயங்குபவராகவும் தலைமைத்துவ ஆற்றல், புத்தாக்கம், நேர்மை கொண்டவராயும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட தகைமைகளை விண்ணப்பதாரர் தாமாகவே கொண்டவராக இருக்கலாம் அல்லது வேறொரு தேசிய அல்லது சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதால் கொண்டிருப்பதும் ஏற்கத்தக்கது.

புலமைப் பரிசுக்கான விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உண்மைத்தன்மையுடன் நிரப்புவதுடன் தமது தகைமையை மேலுறுதிப்படுத்தும் விதமாக அமையும் பத்திரங்கள், நற்சான்றிதழ்கள், சிபார்சுப் பத்திரங்கள், தம்மால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அல்லது தம்மைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் என்பனவற்றையும் விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கலாம்.

மேற்கூறப்பட்ட நான்கு விருதுகளுக்கும் தங்கள் அனுபவத்தில் தாங்கள் கண்டுவரும் பொருத்தமான தனிநபர் அல்லது அமைப்பினை பரிந்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.