Home செய்திகள் எந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை: சித்தார்த்தன்

எந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை: சித்தார்த்தன்

204
0

எந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயம் இன்று மட்டக்களப்பு, பூம்புகாரில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்தமையே ரணில் விக்ரசிங்கவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதற்கான முக்கிய காரணம். கடந்தகால தேர்தல்களில் மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு வாக்களித்தனர்.

ஆனால் அவர்கள் மீது எந்த நம்பிக்கையினையும் கொண்டு வாக்களிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலமான உறுதிமொழி வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அதனை பின்னர் பெற்றுக் கொள்ளவில்லை.

மேலும், தமிழ் மக்களுக்கு தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் பலமான சக்தியாகவுள்ளோம்” என சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

]]>