
வடக்கு மாகாணம் முழுவதும் நாளை திங்கட்கிழமை முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் வடக்கு முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடமாகாண ஆசிரியர் சங்கம், யாழ் வர்த்தகர் சங்கம், கிளிநொச்சி வர்த்தகர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, உள்ளிட்ட பல தரப்புக்களும் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுள் ஒன்றாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் காணப்படுகின்றது. உள்ளக விசாரணைப் பொறிமுறையையும் உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமைகள் சபையால் மேற்படி நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதையும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க
இலங்கை அரசு தொடர்ந்தும் தவறுவதனால் அந்தக் குற்றங்கள் தொடர்பில்
பன்னாட்டு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற
வேண்டிய அவசியம் எழுவதை ஐ.நா. மனித உரிமைகள் சபை கவனத்தில் கொள்ள
வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கான நியாயமான தீர்வை பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவே சாத்தியமாக்க முடியும். ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என வலியுறுத்தியே இவ் மாபெரும் மக்கள் போராட்டம் நாளை கொளீ நொச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
]]>